‘கால்நடை வளர்ப்புக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்’; தமிழக அரசுக்கு கோரிக்கை
‘கால்நடை வளர்ப்புக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்’; தமிழக அரசுக்கு கோரிக்கை
ஆடு, மாடு கால்நடை வளர்ப்புக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது..
இதுகுறித்து தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவரும், இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவருமான எம்.கோபாலகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கால்நடை வளர்ப்பு நலவாரியம்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மிகப்பெரிய பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ரூ.5 லட்சம் நிதியை தமிழக அரசிடம் வழங்க உள்ளோம். யாதவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அம்பாசங்கர் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தாததால், மாநிலத்தின் மூன்றாவது பெரிய சமுதாயமான எங்கள் சமுதாயத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே யாதவ இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு உதவ வேண்டும்.
ஆடு, மாடு கால்நடை வளர்ப்பை பாரம்பரிய தொழிலாக கொண்டுள்ள யாதவர்களுக்கு கால்நடை நல வாரியம் ஒன்றை அமைத்து, அதன் தலைவராக யாதவ சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி வார்டுகள் தோறும் கால்நடை கூடங்களையும் அமைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். யாதவ சமுதாயத்தை சேர்ந்த வக்கீலை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க வேண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துதல், வரும் சட்டமன்ற தேர்தலில் யாதவ சமுதாயத்தினருக்கு வாய்ப்பு அளிக்கும் அரசியல் கட்சியின் வெற்றிக்காக உழைக்கவும் முடிவு செய்து உள்ளோம்.
மத்திய அரசுக்கு நன்றி
விடுதலை போராட்ட வீரர் அழகு முத்துக்கோனுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட ஒப்புதல் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், பொன்.ராதாகிருஷ்ணனன் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக யாதவ மக்களின் பலத்தை காட்டும் வகையில் வரும் டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் திருவண்ணாமலை மற்றும் மதுரையில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன் பொதுசெயலாளர் ஆர்.பி.தர்மலிங்கம், பொருளாளர் கே.எத்திராஜ், இளைஞர் அணி செயலாளர் பி.வரதராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.