வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை வாய்ப்பு
இன்று (21.11.2015) காலை 8.30 மணியளவில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம்| பட உதவி: ஐ.எம்.டி. இணையதளம்.
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
அண்மையில் அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடலூர் அருகே கரையைக் கடந்தது. இதனால், தமிழகத்தில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து இந்த மாவட்டங்கள் தற்போதுதான் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
 
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடலோர மாவட்டங்களில் மிக கனமழை, கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 9 செ.மீ., மழையும்; நாங்குநேரியில் 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
 
சென்னையைப் பொருத்தவரை கேளம்பாக்கத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்