தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு

தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு

தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு
 
தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 
முட்டை வினியோகம்
 
சென்னை ஐகோர்ட்டில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த எம்.ஜெயகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
 
ஜே.கே. முட்டை மார்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். ஒப்பந்த அடிப்படையில் அரசின் மதிய உணவு திட்டத்துக்கு முட்டை வினியோகம் கடந்த 20 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.
 
பொதுவாக முட்டை விலையை, அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்.இ.சி.சி.) நிர்ணயிக்கிறது. அரசு இதற்காக மாவட்ட அளவில் அழைப்பு விடுத்து, முட்டை சப்ளைக்கான ஒப்பந்தத்தை அளிக்கிறது.
 
வருவாய் இழப்பு
 
கடந்த 2014–ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெண்டருக்கான அறிவிப்பாணை மாநில அளவில் வெளியிடப்பட்டது. அதுபோல் டெண்டரில் பல்வேறு நிபந்தனைகள் காரணமில்லாமல் மாற்றப்பட்டு இருந்தன. அந்த புதிய முறை, தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் விதிகளுக்கு முரணாக உள்ளது.
 
இந்த புதிய முறையால் குறிப்பிட்ட காலத்தில் முட்டையை அரசு பெறமுடியாது. இதனால் மதிய உணவு திட்டத்தின் பயனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.
 
தனியாருக்கு ஆதாயம்
 
தலைமைச் செயலாளர், சமூகநலம் மற்றும் மதிய உணவு திட்ட முதன்மைச் செயலாளர், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குனர் ஆகியோர் அரசுக்கு சாதகமாக செயல்பட வேண்டும். ஆனால் உயர்ந்த விலை நிர்ணயத்தை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் சில தனியார் முட்டை நிறுவனங்கள் ஆதாயம் அடைந்துவிட்டன.
 
இது என்.இ.சி.சி.யின் விலை நிர்ணயத்துக்கு முரணாக இருப்பதால், அரசு அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளை செய்கின்றனர். ஒரு முட்டைக்கு ரூ.4.51 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டு சில நிறுவனங்களுக்கு சப்ளை உத்தரவு தரப்பட்டுள்ளது. இது என்.இ.சி.சி. நிர்ணயிக்கும் விலையை விட அதிகம்.
 
ரூ.22 கோடி இழப்பு
 
ஒரு முட்டைக்கு சராசரியாக ரூ.1.25 முதல் ரூ.1.38 வரை அதிகமாக விலை தரப்படுகிறது. இதனால் அரசுக்கு கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ரூ.22.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தைத் தொடர்ந்தால், ஆண்டுக்கு ரூ.75 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படும்.
 
இதுகுறித்து அரசுக்கு பலமுறை புகார்கள் கூறினேன். எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. எனவே முறைகேடு செய்துள்ள அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, தலைமைச் செயலாளர், சமூகநலம் மற்றும் மதிய உணவு திட்ட முதன்மைச் செயலாளர், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
அரசுக்கு நோட்டீசு
 
இந்த வழக்கை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் அரசு பதில் அளிக்கும்படி நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்