நீதி மறுக்கப்படும் பாலஸ்தீனியர்கள்

நீதி மறுக்கப்படும் பாலஸ்தீனியர்கள்

மத்திய கிழக்கில், அதாவது இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில், என்றுமே வன்முறைகள் நடந்துகொண்டு அமைதி இல்லாமல் இருப்பதற்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்பது போல் எல்லா ஊடகங்களும் சித்தரிக்கின்றன. இது எவ்வளவு தவறு என்பது யூதர்கள், பாலஸ்தீனத்திற்குள் குடியேறிய சரித்திரத்தைப் பார்த்தால் நன்கு புரியும். 
 
கி.மு. 132இல் யூதர்கள், பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்திற்கு ஆளான பிறகு ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவின் நாடுகளிலும் மற்ற நாடுகளிலும் குடியேறினர்.  பல நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் தங்கள் இனம் மற்ற இனங்களை விட உயர்ந்த இனம் என்று நினைத்து அங்குள்ள சமுதாய மக்களிடமிருந்து தனித்தே வாழ்ந்து வந்தனர். அதிக வட்டிக்குப் பணம் கொடுப்பது போன்ற இவர்களது தொழிலாலும் அங்குள்ள மக்களால் இவர்கள் வெறுக்கப்பட்டனர். 
 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று விரும்பி, அந்தத் தனி நாடு தாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அங்கு அப்போது கிறிஸ்தவர்களும் அரேபியர்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையை தங்கள் வசதிக்கேற்ப புறக்கணித்துவிட்டு பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்தனர். இப்படி அவர்கள் குடியேறி, அங்கு வாழ்ந்துவந்த பாலஸ்தீனர்களை அவர்கள் இடங்களிலிருந்து இடம்பெயர்த்து, அங்கு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக்கொண்டதுதான் இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு வித்திட்டது. 
 
1938இல் காந்திஜியே யூதர்கள், பாலஸ்தீனர்களின் அனுமதி இல்லாமலேயே அங்கு குடியேறியதைக் கண்டித்து தன் ஹரிஜன் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: “பாலஸ்தீனம், அரேபியர்களுக்குச் சொந்தமானது. அரேபியர்களின் நல்லிணக்கத்தோடு மட்டுமே யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேற முடியும். பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது அதை முழுவதுமோ யூதர்களின் நாடாகத் திருப்பிக் கொடுத்துக் கௌரவமுள்ள அரேபியர்களின் அந்தஸ்தைக் குறைப்பது நிச்சயமாக மனித இனத்திற்கு இழைக்கும் கொடுமையாகும்”.

 
1897இல் இஸ்ரேல் நாடு உருவாக முக்கிய காரணகர்த்தாவான ஹெர்ஸல், பல நாடுகளிலுமுள்ள யூதர்களை சுவிட்ஸர்லாந்தின் பேஸலில் ஒன்று கூட்டியபோது பாலஸ்தீனத்தில் நான்கு சதவிகிதம் மட்டுமே யூதர்கள்; பத்து சதவிகிதம் கிறிஸ்தவர்கள்; மீதிப் பேர் இஸ்லாமியர்கள். அப்போதிலிருந்து யூதர்கள், பாலஸ்தீனத்திற்குள் குடியேறிய வண்ணம் இருந்தனர். 
 
இஸ்ரேல் நாடு, பாலஸ்தீனத்தில் உருவாக, யூதர்களுக்குத் துணைபுரிந்த பிரிட்டனைத் தூண்டிய கெயிம் வெயிஸ்மென், 1919இல் “பாலஸ்தீனத்தில் பத்து சதவிகிதம் பேர்தான் யூதர்கள். அரேபியர்கள் எங்களைப் போல் ஒன்பது மடங்கு அதிகம் என்பது உண்மைதான். ஆனால் யூதர்கள், பாலஸ்தீனர்களைப் போல் பத்து மடங்கு அதிக புத்திசாலிகள். அது ஒன்றே போதும். அரேபியர்கள் பாலஸ்தீனதை எங்களுக்குக் கொடுத்துவிட்டு அதை விட்டு வெளியேறுவதற்கு” என்றாராம்!
 
இப்படிப் பாலஸ்தீனத்திற்குள் குடியேறிய யூதர்கள், தங்கள் பண பலத்தால் அரேபியர்களிடமிருந்து நிலங்களை வாங்கிப் போட்டு விவசாயக் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர்; அந்த நிலங்களில் வேலை பார்க்க யூதர்களை மட்டுமே அமர்த்திக்கொண்டனர். அரேபியர்களிடமிருந்து வாங்கிய நிலங்களை அவர்களுக்குத் திருப்பி விற்கக் கூடாது என்று விதிமுறைகளையும் அமைத்துக்கொண்டனர். பல தொழிற்சாலைகளையும் கல்வி நிலையங்களையும் நிறுவிக்கொண்டனர். வெளியிலிருந்து யூதர்கள் பலரைப் பாலஸ்தீனத்திற்கு வரவழைத்து தங்கள் எண்ணிக்கையையும் கூட்டிக்கொண்டனர். 
 
யூதர்கள் அதிக அளவில் பாலஸ்தீனத்திற்குள் குடியேறித் தங்கள் வாழ்வாதாரத்தையே சீர்குலைக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரேபியர்கள், யூதர்கள் மேலும் மேலும் பாலஸ்தீனத்தில் குடியேறுவதைத் தடுக்க முயன்றனர். அவர்கள் முயற்சி பலன் தராததால் யூதர்களைத் தாக்க முயன்றனர். அதை தடுத்துத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள யூதர்கள் ஒரு படையை நிறுவிக்கொண்டனர். தங்களைத் தாக்கிய அரேபியர்களை அவர்களை விட அதிகப்படியாகத் தாக்கினர். இப்படி பண பலமும் ஆள் பலமும் ஆயுத பலமும் பெற்று விளங்கிய யூதர்கள், தங்களைப் பாலஸ்தீனத்தில் நன்றாக நிலைப்படுத்திக்கொண்டனர்.  
 
பாலஸ்தீனத்தில் யூதர்கள் நிலைபெறத் தொடங்கியதும் அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. அப்போது பாலஸ்தீனத்தை மேற்பார்வை செய்துவந்த பிரிட்டன், பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் கொடுக்க நினைத்தது.  இது எவ்வளவு பெரிய அநீதி! அரேபியர்களுக்குச் சொந்தமான பாலஸ்தீனத்தை வெளியிலிருந்து வந்த யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே பிரித்துக் கொடுக்க பிரிட்டன் நினைத்தது பெரிய தவறு.
 
இதை விடப் பெரிய தவறு, 1947இல் ஐ.நா.வின் பாலஸ்தீனப் பிரிவினைத் திட்டம். ஆறு லட்சம் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தின் 57 சதவிகித இடமும் பதினாலு லட்சம் அரேபியர்களுக்கு 43 சதவிகித இடமும் என்று ஒதுக்கியது. தங்களுக்கு உரிமையே இல்லாத இடத்தில் இவ்வளவு நிலம் கிடைத்ததால் யூதர்கள் அவசர அவசரமாக் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை பிரகடனப்படுத்திக்கொண்டனர். முழுப் பாலஸ்தீனமும் தங்களுடையது என்று நினைத்திருந்த பாலஸ்தீனர்கள், ஐ.நா.வின் முடிவை ஒப்புக்கொள்ளாததால் இன்று வரை தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் பல நாடுகளில் அகதிகளாகவும் இஸ்ரேலிலேயே இரண்டாம்தரக் குடிமக்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
 
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் இஸ்ரேலை உருவாக்கிகொண்டதோடு யூதர்கள் திருப்தி அடையவில்லை. ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளை வன்முறைகளால் பிடித்துக்கொண்டு, அரேபியர் வாழ்ந்த நானூறுக்கும் மேற்பட்ட கிராமங்களை முற்றிலுமாக அழித்துவிட்டு பாலஸ்தீனத்தின் வரைபடத்திலிருந்தே அவற்றை அகற்றிவிட்டனர். டார் யாசின் என்ற 750 அரேபியர்கள் வாழ்ந்த ஊரில் நடந்த வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்த விஞ்ஞான மேதை ஐன்ஸ்டைன், இஸ்ரேலுக்குப் பேரழிவு நிகழ்ந்தால் அதற்கு யூதர்கள் மத்தியில் தோன்றியிருக்கும் கொலை பாதகர்களும் பிரிட்டனும்தான் பொறுப்பு என்று கூறியிருக்கிறார்.
 
யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே எத்தனையோ சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இஸ்ரேல் அமைதிக்கான எந்தச் சமரச ஏற்பாட்டின் நிபந்தனைகளையும் சரிவர நிறைவேற்றவில்லை. 1993இல் ஏற்பட்ட ஆஸ்லோ ஒப்பந்தத்தையும் பின்பற்றவில்லை. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலான இடங்களைத் தன் ஆளுகையில் இப்போது வைத்திருக்கிறது. ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் யூதக் குடியிருப்புகளை அமைத்திருக்கிறது. தான் ஆக்கிரமித்த பகுதிகளில் வாழும் பாலஸ்தீனர்களைப் பலவாறாகச் சித்திரவதை செய்கிறது.
 
இப்போது மூன்று யூதப் பையன்களை கடத்தியவர்கள் யாரென்று நிரூபணமாகாமலே இருநூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்திருக்கிறது. எப்போதும் இப்படித்தான். இப்போதும் ஹமாஸ் தாக்குதலால் ஒரு இஸ்ரேலியக் குடிமகனும் மரிக்காதபோது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து பல அப்பாவி பாலஸ்தீனர்களைக் கொன்று குவிக்கிறது. இதைக் கண்டிக்காத மோடி அரசு, காந்திஜியின் தார்மீக நோக்கிலிருந்து எவ்வளவு தூரம் விலகிவிட்டது என்பது தெரிகிறது.
 
(முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை, பல்லாண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர். பல நூல்களின் ஆசிரியர். அவர் எழுதிய பாலஸ்தீனப் பிரச்சனை பற்றிய நூல் அடையாளம் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது. தொடர்புக்கு n_annamalai@yahoo.com)

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்