பொன்னி வஞ்சியை வந்தடைகிறாள் இன்று!
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரிநீர் இன்று காலை கரூர் மாவட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி சமவெளி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 9ஆயிரம் கனஅடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று மாலை திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை கரூர் மாவட்டத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9ஆயிரம் கன அடிநீர் அளவுக்குத்தான் ஆற்றில் வருகிறது என்பதால் வெள்ள அபாயம் எதுவும் இங்கு ஏற்பட வாய்ப்பில்லை.
கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றின் தாழ்வான பகுதியாக தவிட்டுப்பாளையம், வாங்கல், மல்லம்பாளையம், மாயனூர் ஆகிய ஊராட்சிகள் உள்ளது. மேட்டூர் அணை தனது முழுகொள்ளவை எட்டிய பின்னர் அதிக அளவு உபரிநீர் வந்தால் தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. நீரின் அளவு அதிகமாகும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திருமண மண்டபம், சமுதாயக்கூடம், பள்ளிகளில் தங்குவதற்கும் மற்றும் உணவு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கோ, குளிக்கவோ, சுற்றிப்பார்க்கவோ, பிற காரியங்களுக்கோ ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாங்கல் காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலம் கட்டும் பணி ஆற்றில் நீர்வரத்து அதிகமானால் பாதிக்கப்படும். கடந்த ஆண்டு இதேபோல மேட்டூர் அணை நிரம்பியது. அப்போது உபரிநீர் மிக அதிகமாக 85ஆயிரம் கன அடிநீர் வரத்து இருந்தது. பின்னர் 45ஆயிரம், 30ஆயிரம்கன அடி என குறைந்தது. அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது காவிரி கரையோரம் கரூர் மாவட்ட பகுதியில் 25 கிராமங்கள் எச்சரிக்கை செய்யப்படும்.