125 ஆண்டு கால சாதனையை முறியடித்தார், ஹெராத்
வெளிநாடு விளையாட்ட,
1360
- கொழும்பில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 33.1 ஓவர்களில் 127 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் இடக்கை பவுலர்களில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரர் என்ற அபூர்வமான சிறப்புக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு 1889–ம் ஆண்டு இங்கிலாந்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜானி பிரிக்ஸ் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் உலக சாதனையாக இருந்தது. 125 ஆண்டு காலமாக ஜானி பிரிக்ஸ் வசம் இருந்த இச்சாதனையை நேற்று 36 வயதான ஹெராத் முறியடித்தார்
- 137 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தப்படுவது இது 18–வது நிகழ்வாகும். இதில் இங்கிலாந்தின் ஜிம் லாகெர், இந்தியாவின் அனில் கும்பிளே ஆகியோர் இன்னிங்சில் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அடங்கும்.
- சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரனுக்கு பிறகு (2 முறை 1998–ம் ஆண்டு மற்றும் 2002–ம் ஆண்டுகளில்) இன்னிங்சில் 9 விக்கெட் கைப்பற்றிய 2–வது இலங்கை பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் ஹெராத் பெற்றார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை பவுலர் என்ற பெருமையை முரளிதரனிடம் (16 டெஸ்டில் 80 விக்கெட்) ஹெராத் தட்டிப்பறித்துள்ளார். அவர் அந்த அணிக்கு எதிராக இதுவரை 17 டெஸ்டில் விளையாடி 83 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மொத்தத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நிறைய விக்கெட்டுகள் எடுத்தவர்களின் வரிசையில் இந்தியாவின் கபில்தேவ் (29 டெஸ்டில் 99 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (15 டெஸ்டில் 90 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஹெராத் இருக்கிறார்.