லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் புகைப்படம் இனி முகநூலில்
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் புகைப்படங்களை முகநூல் பக்கங்களில் வெளியிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. இதனை லஞ்ச ஒழிப்புத் துறை (ஏ.சி.பி.) டைரக்டர் ஜெனரல் பிரவீன் தீக்ஷித் உறுதி செய்தார்.
முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய பக்கம் திறக்கப்படும். அதில் லஞ்சம் வாங்கி பிடிபடும் அதிகாரிகளின் புகைப்படம் மற்றும் அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் அறியும்படி செய்து அவமானப்படுத்தினால் ஊழல் அதிகாரிகள் திருந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊழல் அதிகாரிகளை மக்கள் தெரிந்து கொள்ளும்படி செய்ய முகநூல் மிகவும் வசதியாக இருக்கும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய முகநூல் பக்கம் திறந்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் படங்களை பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் வெளியிட்டால் லஞ்சம் வாங்குவது மிகவும் குறைந்துவிடும் என நம்புகிறோம். அதற்காக எங்கள் முகநூல் பக்கங்களை பார்க்கும்படி இளைஞர்களை கேட்டுக்கொள்வோம். அதில் சம்பந்தபட்ட அதிகாரிகளின் குழந்தைகள் மனைவி மற்றும் உறவினர்களும் அவர்களை அறிந்து கொள்வார்கள். அதன்பின் அந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்க பயப்படுவார்கள் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முகநூலில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் படத்துடன் அவர்கள் வகித்த பதவி, வாங்கிய லஞ்சத் தொகை, அவர்கள் வீடுகளில் நடத்திய சோதனை விவரம், வீட்டில் கைப்பற்றிய பொருட்கள் போன்ற விவரங்களும் அதில் வெளியிடப்படும்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதுவரை 722 லஞ்ச குற்றங்களை கண்டுபிடித்துள்ளது. அது தொடர்பாக 1,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 344 சம்பவங்களில் பொறிவைத்து 448 அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புதிய டைரக்டர் ஜெனரலாக பிரவீன் தீக்ஷித் பதவி ஏற்ற பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை புதிய அவதாரம் எடுத்துள்ளது. பிரவீன் தீக்ஷித் பதவி ஏற்றபிறகே அனைத்து அரசு அலுவலகங்களையும் கண்காணிக்க மொபைல் வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றி மக்கள் பயமின்றி வந்து புகார் செய்ய வசதியாக இப்படி செய்யப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.