கரூர் - 150 ஆண்டு அரச மரம் | நாட்டின் வளர்ச்சி அதை வேறு இடத்துக்கு மாற்றியது
கரூர் நான்குவழி சாலை பணிக்காக, வேரோடு பெயர்த்து எடுக்கப்பட்ட, 150 ஆண்டு பழமையான அரசமரம், சமூக அமைப்புகளின் முயற்சியால், வேறு இடத்தில் நடப்பட்டது.
கரூர், சுக்காலியூர் காந்திகிராமம் நான்குவழி சாலை பணி நடந்து வருகிறது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் இருந்த, ஏராளமான மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. கருப்பகவுண்டன்புதுார் சுங்கச்சாவடி அருகே இருந்த, 150 ஆண்டு பழமை வாய்ந்த, அரசமரத்தை அகற்றும் பணியில், ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டனர்.பழமை வாய்ந்த அரசமரத்தை காப்பாற்ற, கரூரில் உள்ள சமூக அமைப்புகள், ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரச மரத்தின் அடிபாகத்தை மட்டும், விலைக்கு வாங்கினர்.இதையடுத்து, அரச மரத்தின் அடிபாகத்தை பெயர்த்து எடுக்கும் பணி, நேற்று காலை, 9:30 மணிக்கு துவங்கியது. இதற்காக, மிகப்பெரிய பழுதுக்கும் இயந்திரம் (கிரேன்) மற்றும் மணல் அள்ளும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மரத்தை சுற்றி, 10 அடி ஆழத்துக்கு, குழி தோண்டப்பட்டது. மரத்தின் அடிபாகத்தில், கயிறு கட்டி, இயந்திரத்தில் பொருத்தப்பட்டது. மணல் அள்ளும் இயந்திரம் உதவியுடன், பகல் 1:30 மணிக்கு, மரம் வேரோடு பெயர்த்து எடுக்கப்பட்டது. பின், லாரியில் ஏற்றி, க.பரமத்தியில் உள்ள, சேரன் பொறியியல் கல்லுாரியில், அந்த மரம் நடப்பட்டது.
ரோட்ராக் சங்கத் தலைவர், விஜய் கூறியதாவது: மரங்களை வெட்டக் கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூரில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில், மரத்தின் அடி பாகத்தை விலைக்கு வாங்கினோம். 35 டன் எடையுள்ள, அரசமரம், சேரன் பொறியியல் கல்லுாரியில் நடப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
அரசமரம் பெயர்த்து எடுக்கும் பணி காரணமாக, நேற்று காலை, 9:30 மணியில் இருந்து, மதியம், 3:00 மணி வரை, கரூர் திருச்சி நெடுஞ்சாலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.