திருவண்ணாமலை அருகே பரபரப்பு: மாணவியின் கண்களில் மணல் கொட்டும் அதிசயம்
கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே மாணவியின் கண்களில் இருந்து மணல் கொட்டுகிறது. இதனை அப்பகுதி மக்கள் அதிசயத்தோடு பார்த்து செல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(46), விவசாயி. இவரது மனைவி பானு (40). இவர்களுக்கு யுவராணி(12), மித்ரா(8) என்ற 2 மகள்களும், ரவிச்சந்திரன்(5) என்ற மகனும் உள்ளனர். யுவராணி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு யுவராணியின் 2 கண்களிலிருந்து மணல் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
அங்கு அவருக்கு 3 நாட்கள் சிகிச்சை அளித்தபிறகு, மாணவியின் கண்களிலிருந்து மண் கொட்டுவது நின்றது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் மாணவி யுவராணியின் கண்களிலிருந்து தொடர்ந்து மணல் கொட்டியது. இதனை கிராம மக்கள் அதிசயத்தோடு பார்த்து செல்கின்றனர். மாணவியின் பெற்றோர் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.