கரூர் நகராட்சிக்கு புதிய திட்டங்கள்

கரூர் நகராட்சிக்கு புதிய திட்டங்கள்

கொடைக்கானல், கும்பகோணம் மற்றும் கரூர் நகராட்சிகளைச் சார்ந்த மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திடும் வகையில் புதிய திட்டங்களைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, 27.8.2014 அன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கரூர் பற்றி கூறியது,

கரூர் நகராட்சியில், கடந்த மூன்று ஆண்டுகளில் 108 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்த் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், பூங்காக்கள் என 608 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. கரூர், இனாம் கரூர் மற்றும் தாந்தோணி பகுதிகளுக்கு ஜெர்மானிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் 68 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்த் திட்ட மேம்பாட்டுப் பணிகள் செயலாக்கத்தில் உள்ளன. 
 
கரூர் நகரின் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க, பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, 
 
1. கரூர் நகராட்சியில், குளத்துப்பாளையம் - ஈரோடு - கரூர் இருப்புப் பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப் பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்தச் சுரங்கப் பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 3 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.
 
2. கரூர் நகராட்சியில் வடக்கு பசுபதி பாளையத்தில், திருச்சி மற்றும் கரூர் திண்டுக்கல் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப் பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்தச் சுரங்கப் பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி, 2 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.
 
மேற்காணும் நடவடிக்கைகள், கொடைக்கானல், கும்பகோணம் மற்றும் கரூர் நகராட்சிகளைச் சார்ந்த மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுச் சூழல் நிலவவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்