இது கரூர் - காற்றில் பறக்கிறது அரசு உத்தரவு, திறந்த நிலையில் கிடக்கும் ஆழ்துளைகள்

இது கரூர் - காற்றில் பறக்கிறது அரசு உத்தரவு, திறந்த நிலையில் கிடக்கும் ஆழ்துளைகள்

கரூர் சுற்று வட்டார பகுதியில், திறந்த நிலையில் காணப்படும் ஆழ்துளைகள் , பொதுமக்களை பயமுறுத்துகின்றன.

தமிழகத்தில், திறந்த நிலையில் இருந்த ஆழ்துளைகளில் குழந்தைகள் தவறி விழுந்து பலியாகும் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்தது. இதனால், திறந்த நிலை உள்ள ஆழ்துளைகளை மூட வேண்டும் என்றும், மாவட்டம் முழுவதும் உள்ள ஆழ்துளைகளை கணக்கெடுக்க வேண்டும், என்றும் அரசு உத்தரவிட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆழ்துளைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. திறந்தநிலை ஆழ்துளைகளை உடனடியாக மூட வேண்டும், என கலெக்டர் ஜெயந்தி, உத்தரவிட்டார். மூக்கணாங்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட வெள்ளியணை- விஜயபுரம் சாலையில், 10க்கும் மேற்பட்ட ஆழ்துளைகள் பஞ்சாயத்து நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தனியார் மூலம் போடப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக, இரண்டு ஆழ்துளைகள் உள்ளது. ஆழ்துளைகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம், 500 அடிக்கு கீழ் சென்றதால், ஆழ்துளைகளில் தண்ணீர் இல்லை. ஆழ்துளைகளில் இருந்த மோட்டார் கழற்றப்பட்ட பின், மூடிக்கு பதிலாக, பெரிய கல்லை வைத்து மூடப்பட்டுள்ளது.

விஜயபுரத்தில் இருந்து வெள்ளியணைக்கு சிறுவர், சிறுமியனர் பள்ளிக்கு செல்கின்றனர். விளையாட்டுத்தனமான குழந்தைகள், கற்களை அகற்றி விட்டு, போர்வெல்லில் எட்டி பார்த்தால், தவறி விழுந்து, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம் கடுமையான உத்தரவு போட்டிருந்த போதிலும், தண்ணீர் இல்லாத ஆழ்துளைகள் மூடாமல் கிடப்பதால், பொதுமக்கள் நலன் அந்தரத்தில் தொங்குகிறது . கரூர் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி கூறியதாவது:

கரூர் யூனியனில், 250 ஆழ்துளைகள் உள்ளது. மூக்கணாங்குறிச்சி பகுதியில் உள்ள திறந்தவெளி ஆழ்துளைகள், குடி நீர் வடிக்கால் வாரியத்துக்கு சொந்தமானது. பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு சொந்தமானது கிடையாது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்