குளித்தலையில் துரித உணவை வழியனுப்பிவிட்ட மக்கள் - இயற்கை உணவு விற்பனை அமோகம்
குளித்தலையில் துரித (பாஸ்ட் புட்) உணவுக்கு விடைகொடுத்து விட்டு பொதுமக்கள் இயற்கை உணவுகளை உண்பதில் ஆர்வம் காட்டி வருவதால் அவற்றின் விற்பனை களை கட்டியுள்ளது.
தமிழகத்தில் பல்லாண்டுகளாக இயற்கை முறையில் உரத்தை தயாரித்து, அதையே தங்களது நிலங்களில் இட்டு இயற்கை முறையில் உணவு தானியங்களை உற்பத்தி செய்த விவசாயிகள் அவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தனர். இவ்வாறு இயற்கை உரத்தில் உற்பத்தியான உணவு வகை தானியங்களையே கிராமம் மற்றும் நகர்புறங்களில் பெரும்பாலானோர் முன்னர் பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் ஆரோக்கியத்துடனும், எந்தவித பக்க விளைவுகள் இல்லாமலும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், தற்போது நாகரீகம் என்ற பெயரில் பல்வேறு கலவை பொருட்களால் தயாராகும் துரித ( பாஸ்ட் புட்) உணவு வகைகளை சாப்பிடுபவர்களில் பெரும்பாலோனோர் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, எண்ணெயில் பொறிக்கப்பட்ட "சிக்கன் 65", மற்றும் பெயர் சொல்ல முடியாத அளவுக்கு விற்பனை செய்யப்படும் புதிய புதிய ரகங்களை விரும்பிச் சாப்பிட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏதேனும் ஒரு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இருப்பினும், அவர்கள் எதையும் பொருட்படுத்த முடியாமல் சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குளித்தலை காவேரி நகர், உழவர்சந்தை செல்லும் வழியில் நூலகம் அருகே பிளஸ் 2 படித்துள்ள ராமையா, டிப்ளமா படித்துள்ள ராஜேஷ்குமார் ஆகியோர் இயற்கை உணவு விற்பனையில் ஆர்வமுடன் களமிறங்கினர்.
உடல் கோளாறுகளை குணமாக்கக் கூடிய இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறிகள், உயர்தர கீரை வகைகள், பயிர் மற்றும் மூலிகைகளைக் கொண்டு சூடான சூப் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது பொதுமக்கள் தாங்கள் காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிப்பதற்கு பதிலாக கொள்ளுச்சாறு , பாலகீரைச்சாறு, வல்லாரைச்சாறு, வழைத்தண்டுச்சாறு, பாகற்காய்ச்சாறு, மணத்தக்காளி கீரைச்சாறு உள்பட ஏராளமான சத்து மிகுந்த பானங்கள் விற்பனை செய்து வருவதால் விரும்பி அருந்துகின்றனர். இதன் காரணமாக இங்குள்ள மக்கள் துரித உணவுக்கு குட்பை சொல்லிவிட்டு காய், கீரை சாறு வகை உள்ளிட்ட இயற்கை உணவு வகைகளை நாடி வருவதால் இவற்றின் விற்பனை களை கட்டியுள்ளது.