விதி மீறும் வணிக நிறுவனங்கள் : வீதியில் நெரிசலால் கரூர் மக்கள்

விதி மீறும் வணிக நிறுவனங்கள் : வீதியில் நெரிசலால் கரூர் மக்கள்

நம்ம ஊரு தொழில்வளம் நிறைந்த பகுதி. கொசுவலை உற்பத்தி , சவுளி சார்ந்த தொழில் , பேருந்து கூடு கட்டும் தொழில் என கரூர் கலை கட்டி  உள்ளதால், கரூர் நகர் பகுதிக்கு சுற்றியுள்ள குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வேடசந்தூர், கொடுமுடி உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

கரூர் நகரின் வணிக பகுதியாக விளங்கும் கோவை சாலை, ஜவஹர் பஜார், பழைய பேருந்து நிலையம், வடக்கு பிரதட்சணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், தனியார் விடுதிகள், உணவகங்கள், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், ஜவுளி நிறுவனங்கள், தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள் உள்ளிட்டவைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் முன்பு இரு சக்கர வாகனங்களோ, நான்கு சக்கர வாகனங்களோ நிறுத்த வசதி கிடையாது.

எந்த ஒரு நிறுவனத்தையும் சாலையோரம் கட்டும்போது வாகனம் நிறுத்துமிடம் விட்டுத்தான் கட்ட வேண்டும் என்பது பொதுவிதி. இந்த விதிமுறையை கடைப்பிடித்துதான் நகராட்சியிடம் வரைபட அனுமதி பெற்று கட்டடத்தை கட்டுகின்றனர்.

ஆனால், கட்டடம் கட்டும்போது நகராட்சி விதிமுறையை காற்றில் பறக்கவிட்டு, லாப நோக்கத்தோடு நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்ட இடத்திலும் கடையை கட்டி வாடகைக்கு விட்டு விடுகின்றனர். இதனால் நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இன்றி சாலையின் ஓரத்திலே நிறுத்தி செல்கின்றனர்.

இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதிகளவில் நெரிசல்களும் சில சில விபத்துகள் கூட நிகழ்கின்றன. இதைத் தடுக்க போக்குவரத்து காவலும் காலை மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு தடுத்துதான் பார்க்கிறார்கள். இருப்பினும் சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடிவதில்லை.

இதற்கு ஒரே தீர்வு நிறுத்துமிடம் இடம் ஒதுக்காமல் விதிமுறை கட்டப்பட்டிருக்கும் வணிக நிறுவனங்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே.

இதுதொடர்பாக போக்குவரத்து காவல் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் இதுபோன்ற விதிமீறல்களால் கடந்த ஜனவரி முதல் இதுநாள் வரை நடந்த விபத்தில் 456 பேர் இறந்துள்ளனர்.

நிறுத்த அனுமதியில்லா இடத்தில நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதத் தொகையாக முதலில் ரூ. 100 அபராதம் விதிக்கிறோம். பின்னர் இரண்டாம் முறையாகவும் அதே நபர் நிறுத்தினால் அவருக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரை அபராதம் விதிக்கிறோம். எனினும் அபராதம் விதிப்பதால் மட்டும் இதற்கு நிரந்தர தீர்வு காண இயலாது. நகராட்சித்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

நிறுத்த இடம் தராமல் அபராதம் மட்டுமே விதிப்பது முறையாகது. தினம் தினம் இந்த நெரிசலில் தள்ளப்பட்டு, நோ பார்க்கிங்கில் வண்டியை விட்டு மாட்டிக்கொண்டு ஆபரதம் கட்டிய அனைத்து நெஞ்சங்களுக்கும் இந்த பதிவு....

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்