தண்ணீர் வண்டிகளுக்கு கரூரில் போட்டாச்சு கடிவாளம்

தண்ணீர் வண்டிகளுக்கு கரூரில் போட்டாச்சு கடிவாளம்

கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், நகருக்குள் வரும் தண்ணீர் லாரிகளுக்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரூரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல் நாள்தோறும் அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். அதனால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்., ஜோஷி நிர்மல்குமார் உத்தரவின்படி, கரூர் நகரில் தண்ணீர் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விதி மீறல்களை தடுப்பது குறித்த கலந்தாய்வுக்கூட்டம், நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் நடந்தது. கூட்டத்தில், கரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்(டி.எஸ்.பி.,) பெரியய்யா தலைமை வகித்தார். போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் நந்தகோபால், விவேகானந்தன் மற்றும் அனைத்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

லாரிகளை வேகமாகவும், தாறுமாறாகவும் ஓட்டக்கூடாது. லாரி ஓட்டுனர்கள் கட்டாயம் சீருடையில் இருக்க வேண்டும். குடி போதையில் வாகனங்களை ஓட்டினால், அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய சிபாரிசு செய்யப்படும். மேலும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தண்ணீர் லாரிகள் காலை, 8 மணி முதல் மதியம், 1 மணி வரையும், மாலை, 3 மணி முதல் இரவு, 9 மணி வரை நகரத்துக்குள் வரக்கூடாது, என்று போக்குவரத்து போலீஸார் அறிவுரை வழங்கினர்.

பொதுமக்கள் பார்வை:

கரூர் நகரில், காவிரி குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். 15 அல்லது 20 நாளைக்கு ஒருமுறை தான் காவிரி குடிநீர் வருகிறது. ஒரு அழைப்பு விடுத்தால், 30 நிமிடத்தில் இருப்பிடம் தேடி தண்ணீர் லாரி வந்து நிற்கும். கரூர் நகராட்சி நிர்வாகம், பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்தாலே நகருக்குள் தண்ணீர் லாரிகள் வர வாய்ப்பில்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பில்லை.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்