இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த மங்கள்யான் விண்கலம், 1,350 கிலோ எடை கொண்டது. ரூ.450 கோடி மதிப்பிலானது. இத்திட்டத்தில் 500 விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திட்டத்தை "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்" (செவ்வாய் சுற்றுவட்டத் திட்டம்) என இஸ்ரோ குறிப்பிடுகிறது.
மங்கள்யான், பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2013 நவம்பர் 5ஆம் தேதி பிற்பகல் 2.38 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் 300 நாட்களை மங்கள்யான் வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் அதிநவீன கருவிகளும் கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. மங்கள்யான் விண்கலம், 15 கிலோ எடையுள்ள 5 துணைக் கருவிகளைக் கொண்டுள்ளது.
செவ்வாய் புறக்காற்று மண்டல நடுநிலை பொதிவு பகுப்பாய்வி (mars exospheric neutral composition analyzer).
இந்த 5 ஆய்வுக் கருவிகளும் மீத்தேன் வாயு, காற்று மண்டலம், வெப்பம் ஆகியவற்றை ஆய்வு செய்யும். அத்துடன் அங்குள்ள தாது வளங்கள் குறித்துக் கண்டறியும் பணியையும் செய்ய உள்ளது.
கடந்த 300 நாட்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த மங்கள்யானின் முக்கியத் திரவநிலை எரிபொருள் பிரதான இன்ஜினுக்கு ‘கும்பகர்ணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் செப்.24 புதன்கிழமை காலை 7.17 மணிக்கு முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டது.
இதுவரை, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்கள் ஆகியவை செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் தங்கள் விண்கலத்தை நுழைத்துள்ளன. நான்காவது நாடாக இந்தியா இணைந்துள்ளது. ஆனால், முதல் முயற்சியிலேயே எந்த நாடும் இந்தச் சாதனையைச் செய்தது இல்லை.
மங்கள்யான்’ வெற்றிகரமாக நுழைந்துவிட்டதால், முதல் முயற்சியிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்திய நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. மேலும், உலகில் குறைந்த செலவில் (ரூ.450 கோடி) செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் என இது புகழ் பெற்றுள்ளது.
செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை மங்கள்யான் செயற்கைக்கோள், இந்தியாவுக்கு பெற்றுத் தந்துள்ளது.
வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள விண்கலங்களால் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இதனால் விண்கலங்களுக்கு இடையே எந்த மோதலும் நடைபெற வாய்ப்பு இல்லை. செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ள விண்கலம் இன்று முதல் புகைப்படம் எடுத்து அனுப்பும். அங்கிருந்து பூமிக்குத் தகவல் வர 12½ நிமிடங்கள் ஆகும். “விண்கலம் ஆரோக்கியமாக உள்ளது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த விண்கலம் 6 மாதம் வரை ஆய்வுகளை மேற்கொள்ளும்.’’ என்று கோட்டீஸ்வர ராவ், மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வருகிற 2017ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டிற்குள் மங்கள்யான்–2 என்ற செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் ஏவத் திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சிகள், விண்வெளித் துறையில் இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பதோடு, பல்வேறு வணிக வாய்ப்புகளையும் பெற்றுத் தரும். செவ்வாய் கிரகத்தை ஜாதகக் கட்டங்களுக்குள் பார்த்து வந்த இந்திய மக்கள், அது எட்டும் தொலைவில் இருப்பதை உணரும் அரிய தருணம், இது.