மங்கள்யான் கேலிசித்திரம் தொடர்பாக நியுயார்க் டைம்ஸ் மன்னிப்பு கோரியது
செவ்வாய்க் கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச் சித்திரம் தொடர்பாக வாசகர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது.
'பணக்கார நாடுகளின் விண்வெளிக் குழு' என்று குறியிடப்பட்ட அறை ஒன்றின் வாசல் கதவருகே ஒரு விவசாயி பசு மாட்டுடன் வந்து கதவைத் தட்டுவது போல இந்தியாவை அது சித்தரித்திருந்தது.
இந்த சர்ச்சை குறித்து முகநூல் பதிவொன்றின் மூலம் எழுதிய நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசெந்தால், இந்தக் கேலிசித்திரம் விண்வெளி ஆராய்ச்சி என்பது எப்படி பணக்கார மேலை நாடுகளின் பிரத்தியேக வெளியாக இனி இல்லை என்பதைக் காட்டவே வரையப்பட்டது என்று கூறி, இந்தக் கேலிச்சித்திரதினால் புண்பட்டிருக்கும் வாசகர்களிடம் மன்னிப்பைக் கோரினார்.
இந்தியாவின் இந்த மங்கள்யான் திட்டம், 74 மிலியன் டாலர்கள் செலவில் நிறைவேற்றப்பட்டது. இது வரை அனுப்பப்பட்ட வேற்றுக் கிரக விண்வெளித் திட்டங்களில் இதுவே மிகவும் குறைந்த செலவு பிடித்த திட்டமாகும்.
நன்றி : பிபிசி தமிழ்