விரைவு பேருந்து(எக்ஸ்பிரஸ்) என்ற பெயரில் தமிழக பேருந்துகள் பகல் கொள்ளை

விரைவு பேருந்து(எக்ஸ்பிரஸ்) என்ற பெயரில் தமிழக பேருந்துகள் பகல் கொள்ளை

தமிழகம் முழுவதும் விரைவு பேருந்து என்ற பெயரில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், பயணிகளிடம் கொள்ளையடித்து வருவது பெரும் அதிர்ச்சியான நிகழ்வு.
 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது செயல்பட்டு வருகிறது. இதில் நகர்ப் பகுதியில் செல்லும் பேருந்துகள், நகரப் பேருந்துகளாகவும், 80 கி.மீ., தொலைவுக்குச் சென்று வரும் பேருந்துகள் சாதாரணப் பேருந்துகளாகவும், 80 கி.மீ., கடந்து செல்லும் பேருந்துகள் அரசு விரைவுப் பேருந்துகள் என்றும் அழைக்கப்படுகின்றன. 
 
இதில் பொதுமக்களுக்கு என்ன பிரச்சனை என்றால், 80 கி.மீ., தூரத்திற்குள் செல்லும் பயணிகள் தெரியாமல், 80 கி.மீ., தூரத்தைக் கடந்து செல்லும் பேருந்தில், ஏறி தாங்கள் செல்லும் இடத்திற்குச் சென்றால், சாதாரணப் பேருந்துக் கட்டணத்தைக் காட்டிலும் ரூ. 6 கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது.
 
உதாரணத்திற்கு, ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்ல, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட அரசுப் பேருந்துகள், பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளாக இயங்கி வருகின்றன. இந்தப் பேருந்துகள், ஈரோட்டில் இருந்து புறப்பட்டால் சித்தோடு, கவுந்தப்பாடி (பேருந்து நிலையத்திற்கு செல்லாது) கோபிசெட்டிபாளையம், இதையடுத்து சத்தியமங்கலம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மட்டுமே நிற்கும்.
 
இதனால் இந்தப் பேருந்துகளில் எப்போதும் பயணிகள் நிரம்பியே காணப்படும். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மைசூருக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள், சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு செல்ல, பாயிண்ட் டூ பாயிண்டாக இயங்கி வருகின்றன.
 
இப்படி இருக்க, சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு செல்லும் அரசுப் பேருந்து, பாயிண்ட் டூ பாயிண்டில் கட்டணமாக, பயணிகளிடம் இருந்து ரூ. 26 வசூல் செய்யப்படுகிறது. இதே போல் சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு செல்ல மைசூரில் இருந்து வரும் தமிழ்நாடு அரசு பேருந்து பாயிண்ட் டூ பாயிண்ட்டில் பயணிகளிடம் ரூ. 6 அதிகரித்து ரூ.34 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
 
இது என்ன பகல் கொள்ளையாக இருக்கிறது? ஒரே அரசுக்கு சொந்தமான ஒரே மாதிரியான பேருந்துகள் ஒரே இடத்திற்கு செல்ல ரூ. 6 அதிகம் பெறுவது எதற்காக என்று நடத்துனரிடம் பயணிகள் கேட்டால், இது மைசூர் செல்லும் பேருந்து, அப்படித்தான் கட்டணம் வசூலிக்கச் சொல்லி எங்களுக்கு உத்தரவு என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி விடுகின்றனர்.
 
அரசுப் பேருந்துகளில் இந்தக் கட்டண அதிகரிப்பு குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு பொது மேலாளரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் மைசூர் போன்ற தொலைதூரங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் விரைவுப் பேரூந்துக்கு உண்டான கட்டணம் வசூலிப்பதால் ரூ.6 அதிகம் என்றார். ஆனால் மைசூர் பேருந்துகளின் கண்ணாடிகளில் பி.பி., என்றுதான் எழுதப்பட்டுள்ளது. அப்படியே விரைவு என்று வைத்துக்கொண்டாலும் அதற்க்கு உண்டான எந்த வசதியும் இந்தப் பேருந்துகளில் இல்லை என்பதே உண்மையாகும்.
 
ஏமாறுவது என்று ஆகிப் போச்சு... சரி கொஞ்சம் என்னணு தெரிஞ்சுகிட்டு ஏமாந்து போங்க......

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்