கூகுளில் தமிழன் சுந்தர் பிச்சைக்கு உயர்ந்த பொறுப்பு
கூகுள் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளின் பொறுப்பாளராகத் தமிழரான சுந்தர் பிச்சை (Sundar Pichai) நியமிக்கப்பட்டுள்ளார். கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி லார்ரி பேஜ்ஜிடமிருந்த (Larry Page) கூகுளின் தேடல் (Search), நிலப்படம், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு (Google search, research, Google maps, commerce, ads, infrastructure, and Google+) ஆகிய பிரிவுகளை இனி சுந்தர் பிச்சை நிர்வகிப்பார். இவற்றுள் தேடல் மற்றும் விளம்பரம் ஆகியவை, கூகுளின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கூகுள் நிறுவனத்தில் லார்ரி பேஜ்ஜூக்கு அடுத்த இடத்திற்குப் பிச்சை முன்னேறியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பிச்சை சுந்தர்ராஜன் (42), சுந்தர் பிச்சை எனப் பரவலாக அழைக்கப்பெறுபவர். மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி கோரக்பூரில் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் (எம்.எஸ்.) பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் வணிகத்தில் முதுகலைப் பட்டமும் (எம்.பி.ஏ.) பெற்றவர்.
கூகுளில் 2004ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த இவர், முதலில் கூகுள் ஆப்ஸில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு குரோம் வலை உலாவிக்கான பொறுப்பை ஏற்றார். 2013ஆம் ஆண்டு, ஆண்ட்ராய்டு பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆனார். ஸ்மார்ட்போன்களின் சந்தையில் ஆண்ட்ராய்டு, முதன்மை இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாக இருந்தார். இதன் தொடர்ச்சியாக, கூகுளின் மேப்ஸ், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளும் பிச்சையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. இந்தப் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள், இனி பிச்சையின் கீழ் பணியாற்றுவார்கள்.
இப்பொறுப்புகளில் இருந்து விடுபட்டுள்ள லார்ரி பேஜ், கூகுளின் வர்த்தகம், செயல்பாடு, கூகுள் எக்ஸ், நிர்வாக மேம்பாடு, சட்டம், நிதி மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார். கூகுளின் யூடியூப், தொடர்ந்து லார்ரி பேஜ்ஜின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். கூகுளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல லார்ரி பேஜ் முழு நேரத்தையும் செலவிட இந்த மாற்றங்கள் உதவும் எனக் கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை, தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்குத் தகுதியானவராக, இதே துறையில் உள்ள பலராலும் கணிக்கப்படுகிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து ஸ்டீவ் பால்மர் விலகியபோது, அந்தப் பொறுப்பக்குச் சுந்தர் பிச்சை நியமிக்கப்படக் கூடும் என முன்பு ஒரு வதந்தி நிலவியது. ட்விட்டர் நிறுவனமும் சுந்தர் பிச்சையை நெருங்கியதாக அந்த வதந்தி விரிந்தது. ஆனால், கூகுளிடமிருந்து பல மில்லியன் டாலரை லாயல்டி ஊக்கத் தொகையாகப் பெற்றுக்கொண்ட பின், சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்திலேயே தொடர முடிவு செய்தார் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.
"சுந்தர் பிச்சை, உலகின் பெரும்பாலான செல்பேசிகளின் மென்பொருளை (ஆண்ட்ராய்டு) ஆளுகின்றார். பெரும்பாலான இணைய உலாவிகளையும் (கிரோம் பிரவுசர்) ஆளுகின்றார். உலகில் பெரும்பாலானோர் இணையத்தில் தகவல் தேடுவது எப்படி (கூகுள் தேடல்) என்பதையும் விரல் நுனியில் வைத்துள்ளார். இதன் மூலம் டிஜிட்டல் உலகின் நம்பர் ஒன் மனிதர் ஆகிவிட்டார்" என்று விஷ்வக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தி.ந.ச.வெங்கடரங்கன், வெப்துனியாவிடம் தெரிவித்தார்.
"சுந்தர் பிச்சை, உலகின் பெரும்பாலான செல்பேசிகளின் மென்பொருளை (ஆண்ட்ராய்டு) ஆளுகின்றார். பெரும்பாலான இணைய உலாவிகளையும் (கிரோம் பிரவுசர்) ஆளுகின்றார். உலகில் பெரும்பாலானோர் இணையத்தில் தகவல் தேடுவது எப்படி (கூகுள் தேடல்) என்பதையும் விரல் நுனியில் வைத்துள்ளார். இதன் மூலம் டிஜிட்டல் உலகின் நம்பர் ஒன் மனிதர் ஆகிவிட்டார்" என்று விஷ்வக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தி.ந.ச.வெங்கடரங்கன், வெப்துனியாவிடம் தெரிவித்தார்.
சுந்தர் பிச்சையின் வளர்ச்சி குறித்துத் நாமும் பெருமிதம் கொள்ளலாம்.