பெங்களூரு, மைசூரு, பெளகாவி.......
இனிமேல் எங்களூரைப் பெங்களூர் என்று ஸ்டைலாகச் சொல்ல முடியாது; சொல்லக் கூடாது! அதிகாரப்பூர்வமாக இனிமேல் பெங்களூரு தான். கர்நாடகாவிலுள்ள 12 நகரங்களுக்கு இப்பெயர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
இந்தப் பெயரை மாற்றும் போட்டி ஒவ்வொரு மாநிலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது பல வருடங்களாக.
• பாம்பே, மும்பை ஆனது 1995இல். இந்தப் பெயர் மாற்றத்திற்கு மகாராஷ்டிரர்கள் 40 வருடம் போராடினார்கள்.
• மெட்ராஸ், சென்னை ஆனது 1996இல்.
• கல்கத்தா, கொல்கத்தா ஆனது 2001.
• த்ரிவேன்றம், திருவனந்தபுரம் ஆனது 1991.
• பாண்டிச்சேரி, புதுச்சேரி ஆனது 2006.
• 2008இல் பூனா, பூனே ஆனது.
• 2011இல் ஒரிசா, ஒடிஷா ஆனது.
இந்தப் பெயர் மாற்றங்களுக்கு ஒவ்வொரு மாநிலமும் செலவழிக்கும் பணம், கோடிக்கணக்கில் என்று செய்திகள் சொல்லுகின்றன. பெயர் மாற்றத்தால் என்ன பயன் என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. பெங்களூர் என்று ஆங்கிலத்தில் இருந்த பெயரை இப்போது பெங்களூரு என்று கன்னடப்படுத்திவிட்டோம் என்று சொல்லுகிறார்கள். பெருகிவரும் ஆங்கில மோகத்தைக் கட்டுப்படுத்தவும், நமது அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இது முதல் படி என்றார் சமீபத்தில் மறைந்த யு.ஆர். அனந்தமூர்த்தி.
உண்மையில் இந்த ஊருக்கு முதன்முதலில் இருந்த பெயர் ‘பெந்தகாளூரு’ அதாவது ‘வேகவைத்த பயறு ஊரு’. காளு என்பது முழு தானியங்ளைக் குறிப்பிடும் சொல். கெம்பே கௌட என்பவர்தான் பெங்களூருவை நிர்மாணித்தவர். அவர் ஒரு சமயம் இந்தப் பக்கம் வந்தபோது அவருக்கு ரொம்பவும் பசித்ததாம். ஒரு முதியவள் அவருக்கு வேகவைத்த பயற்றைச் சாப்பிடக் கொடுத்தாளாம். அதிலிருந்து இந்தப் பகுதியை அவர் பெந்தகாளூரு என்று குறிப்பிட ஆரம்பித்து, அது மருவி பெங்களூர் ஆயிற்றாம்.
இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. பேகூரு அருகே கண்டெடுக்கப்பட்ட, இந்தப் பிரதேசத்தை ஆண்ட கங்க மன்னர்களின் (பொது ஆண்டு (கி.பி.) 860) காலத்தில் வைக்கப்பட்ட ஒரு வீரக் கல்லில் இந்த ஊரின் பெயர் பெங்கவல்-ஊரு என்றிருக்கிறதாம். இதற்கு அர்த்தம், பாதுகாவலர்களின் நகரம் என்பது. இந்தப் பெயர், சில பல மாற்றங்களுடன் பெங்களூர் ஆகிவிட்டது.
தேதி வாரியாக இந்தப் பெயர் மாற்றத்தின் வரலாறு:
• யு.ஆர். அனந்தமூர்த்தி, பெங்களூரு என்று பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது 2005ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி.
• செப்டம்பர் 27, 2006ஆம் ஆண்டு ப்ருஹத் பெங்களூரு மஹாநகர பாலிகே, இந்தக் கோரிக்கையை முன்மொழிந்தது.
• ஆகஸ்ட் 30, 2012 – மத்திய அரசு சர்வே ஆப் இந்தியாவிடமிருந்து இந்தப் பெயர் மாற்றம் பற்றிக் கருத்துரை கேட்டது.
• சர்வே ஆப் இந்தியா, ரயில்வே துறை, தபால் துறை, அறிவியல், தொழில்நுட்பத் துறை, உளவுத் துறை போன்ற துறைகளின் ஒப்புதலுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி கொடுக்க, வெற்றிகரமாக இந்த நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன.
• அக்டோபர் 17, 2014 மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
• கர்நாடக முதல்வர் நவம்பர் 1, 2014 கன்னட இராஜ்யோத்சவ தினத்திலிருந்து இந்த நகரங்கள் புதிய பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்தார்.
நகரங்களின் பெயரை மாற்றியாயிற்று. சரி. பல்கலைக்கழகங்களின் பெயர்கள், இன்னும் பல பிராண்ட் பெயர்கள் என்னவாகும்? மைசூர் சாண்டல் சோப் மைசூரு சாண்டல் சோப் என்றாகுமா? மைசூர் பல்கலைக்கழகம் மைசூரு பல்கலைக்கழகம் என்றாகுமா? மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால் பெயர்களுக்கு இருந்த மதிப்பு குறையலாம் என்று இவர்கள் கருதுகிறார்கள்.
இந்தப் பல்கலைக்கழகம், இந்தியாவில் ஆறாவதாக அமைந்த பல்கலைக்கழகம். 1916ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி மைசூரு மகாராஜா நால்வாடி கிருஷ்ணராஜ வாடியார், அரியணை ஏறினார். அதைத் தொடர்ந்து இந்தப் பல்கலைக்கழகம் 1916ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி அமைக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு நூறு ஆண்டுகள் காணப் போகும் மைசூர் பல்கலைக்கழகம் தன் பெயரை மாற்றிக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. சில பல்கலைக்கழகங்கள், ஏற்கனவே பெயர் மாற்றத்திற்குத் தங்களைத் தயார் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டன பாம்பே பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் என்று ஆனது போல.
பெயர் மாற்றப்பட்ட நகரங்களின் பழைய பெயர்களும் புதிய பெயர்களும், இதோ ஒரு பட்டியல்:
பழைய பெயர் புதிய பெயர்
பெங்களூர் பெங்களூரு
பெல்காம் பெளகாவி (Belagavi)
பெல்லாரி பள்ளாரி (Ballari)
பீஜாபூர் வீஜாபூரா (Vijapura)
சிக்மகளூர் சிக்கமகளூரு
குல்பர்கா கலபர்கி (Kalaburgi)
ஹாஸ்பெட் ஹாஸபெட்டே (Hosapete)
மேங்களூர் மங்களூரு (Mangaluru)
மைசூர் மைசூரு (Mysuru)
ஷிமோகா ஷிவமொக்கா
தும்கூர் துமகூரு (Tumakuru)
ஹூப்ளி ஹுப்பளி (Hubballi)
ஹூப்ளி ஹுப்பளி (Hubballi)