இங்கிலாந்தின் மகள்கள் - ஒரு இந்தியனின் ஆவேசப்படம்
நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ கல்லூரி மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவேளையில் டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். பின்னர் அவர் பரிதாபமான நிலையில் உயிரிழந்தார்.
இந்த கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் என்பவனிடம் பி.பி.சி.–4 குழுவினர் மற்றும் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் ’இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்திற்காக பேட்டி கண்டனர். இந்த ஆவணப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த பதிவுக்கு மறுபதிவாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் என்பவர் இங்கிலாந்தில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவரிக்கும் விதமாக ’இங்கிலாந்தின் மகள்கள்’ [United Kingdom's Daughters] என்ற தலைப்பில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
’இங்கிலாந்து உலகளவில் பாலியல் பலாத்காரம் டெய்யும் நாடுகளில் 5ஆவது இடத்தில் இருக்கிறது’ என்று ஆரம்பிக்கும் இந்த வீடியோ, 10 சதவீத இங்கிலாந்து பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அனுபவம் உள்ளவர்கள் என்றும், இங்கிலாந்தில் நாளொன்றிற்கு 250 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகிறது என்று குறிப்பிடுகிறார்.
மேலும், ’மூன்றில் ஒரு பங்கு இங்கிலாந்தினர்தான் கற்பழிப்பு குறித்து புகார் செய்கின்றனர். இதில் தண்டனை பெறுபவர்கள் 10 சதவீதத்தினர்தான். 41 சதவீத திருமணங்கள் 20 வருடத்திற்குள்ளேயே முறிந்துவிடுகிறது. 11 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழேயே வாழ்கிறார்கள்.
65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 31 சதவீதம் பேர் முதியோர் இல்லத்தில்தான் வாழ்கிறார்கள்’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தும், காட்சிப் பதிவுகளை கொண்ட வீடியோவை ஹர்விந்தர் சிங் வெளியிட்டுள்ளார்.
தனது யூ டியூப் வீடியோ வெளியீட்டில் ”மகள் என்றால் மகள்தான், அது இந்திய மகள் என்றோ பிரிட்டன் மகள் என்றோ பார்க்கப்பட வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.