ரயில் பயணிகள் கவனத்திற்கு - உங்களுக்கு ஒரு நற்செய்தி
இறங்க வேண்டிய நிறுத்தத்தை தவற விட்டு விடுவோமோ என்ற பயம் இன்றி ரயில் பயணிகள் இனி நிம்மதியாக தூங்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் வசதி செய்துள்ளது. இறங்க வேண்டிய நிறுத்தம் வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே அலைபேசி அழைப்பு மூலம் பயணிகளை எழுப்பும் வசதி மற்றும் அவர் ஏற வேண்டிய நிறுத்தம் வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் எழுப்போலி அழைப்பு வரும் வசதியையும் ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.
139 என்ற ரயில்வே அவசர சேவை எண் ஆண்டு முழுவதும் அனைத்து நேரமும் இயங்கக் கூடியதாகும். இந்த எண்ணை தொடர்பு கொண்டு, ரயில் புறப்படும் அல்லது போய் சேரும் நேரம், ரயில் தற்போதுள்ள இடம், அதன் கட்டணம் ஆகியவற்றை பெற முடியும். இந்த சேவை எண் மூலம் உணவையும் முன்பதிவு செய்ய முடியும். தக்கல் சீட்டு நிலவரம், சீட்டு ரத்து செய்தல், பணம் திரும்பப் பெறும் விதிமுறைகள், நடைதள நிலவரம் போன்றவற்றையும் 139 சேவையும் மூலம் பெற முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.