அரசு விளம்பரங்களில் முதலமைச்சர்கள் மற்றும் தனிநபர்களின் படங்களுக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி
* துதிபாடும் விளம்பரங்கள் கண்டிப்பாக வரக்கூடாது.
* மறைந்த தலைவர்கள் படங்கள் வரலாம்.
* கட்சி சின்னம், கொடி வெளியிட கூடாது.
* அரசு விளம்பரங்கள் தருவதில் பாகுபாடு கூடாது.
நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் உட்பட ஊடகங்களில் அரசு வெளியிடும் விளம்பரங்களில் அதிபர், பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். முதல்வர் உட்பட மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஊடகங்களில் அரசு வெளியிடும் விளம்பரங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி துதி பாடப்படுகின்றன. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு மையம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. நாடாளுமன்றம் , இந்த விடயம் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதற்கான முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். அரசு பணத்தில் இருந்து விளம்பரங்களுக்கு எவ்வளவு தொகை செலவழிக்க வேண்டும் என்று வரைமுறை விதிக்க வேண்டும். விளம்பரங்கள் வரம்பு மீறியோ, பாரபட்சமாகவோ இருக்க கூடாது. இதுபோல, ஆளும் கட்சியின் தனிப்பட்ட நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு விளம்பரங்கள் கண்டிப்பாக வெளியிடக்கூடாது. இதற்கு மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.