குளித்தலையில் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் இறந்தனர்

குளித்தலையில் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் இறந்தனர்

கல்லூரி மாணவர்கள் 3 பேர் நண்பரின் பிறந்த நாள் விருந்துக்கு வந்து குளித்தலையில், காவிரி ஆற்றில் மூழ்கி  பரிதாபமாக உயிரிழந்தனர்.

குளித்தலை சபாபதி நாடார் தெருவை சேர்ந்தவர் மதார்பாஷா. இவரது மகன் ஆசிக் (வயது 21). இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் எம்.ஏ. அரபிக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு நேற்று பிறந்த நாள். இதை கொண்டாட தன்னுடைய கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்த அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த சித்திக் அலி(21), பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்த தென்காசியை சேர்ந்த அக்பர் பாதுஷா(18), திண்டுக்கல்லை சேர்ந்த நஸ்ருதீன்(18) உள்பட கல்லூரி நண்பர்கள் மொத்தம் 15 பேரை தனது வீட்டிற்கு விருந்துக்கு நேற்று அழைத்து இருந்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் 15 பேரும் ஆசிக் வீட்டிற்கு நேற்று சென்று விருந்து சாப்பிட்டனர். பின்னர் குளித்தலை காவிரி ஆற்றை சுற்றி பார்த்து விட்டு வரலாம் என்று குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றுக்கு 15 பேரும் சென்றனர்.

அங்கு ஆற்றில் தண்ணீர் ஓடுவதை பார்த்ததும் அக்பர் பாதுஷா, நஸ்ருதீன், சித்திக் அலி ஆகிய 3 பேருக்கு ஆற்றில் இறங்கி குளிக்க ஆசை ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றில் உள்ள ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள் இது குறித்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும், குளித்தலை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.ஆனால் அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து மற்ற மாணவர்களும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஒன்று சேர்ந்து காவிரி ஆற்றில் இறங்கி அவர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறந்த நாள் விருந்துக்கு வந்த இடத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்