சென்னை நகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படுமா?

சென்னை நகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படுமா?

சென்னை நகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படுமா?

 

சென்னை நகரில் நாளுக்குநாள் மக்கள்தொகை எவ்வாறு பெருகிக்கொண்டே செல்கிறதோ, அதேபோல் குற்றங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. கடந்த டிசம்பர் மாதம் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், ரயிலில் பயணம் செய்தபோது, அந்த பெண்ணிடம் நகையை பறித்த கும்பல், அவரை ரயிலில் இருந்து தள்ளி விட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் கடந்த மாதம் 20ம் தேதி கஸ்தூரிபா ரயில் நிலையத்தில் நின்றிருந்த இளம்பெண்ணை மர்ம ஆசாமிகள் சிலர் தாக்கினர். இந்த சம்பவம் பட்டப்பகலில் பீக் அவர்சில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சென்னை நகரில் அடிக்கடி நடக்கும் சம்பவங்களுள் ஒன்று செயின் பறிப்பு. தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு நடக்கிறது. ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வரும் ஆசாமிகள் நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கின்றனர். பைக்கில் வேகமாக வரும் மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை பறித்து செல்கின்றனர். இதனால் பெண்களின் கழுத்தில் காயம் ஏற்படுவதுடன் சில சமயங்களில் உயிரிழப்புக்குகூட காரணமாகி விடுகின்றன.
 

பைக் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களிடம் செயினை பறிக்கும்போது, பைக் ஓட்டுபவர் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதுதவிர ஈவ் டீசிங்காலும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பஸ்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் ஈவ் டீசிங்கால் அவதிக்குள்ளாகின்றனர். கூட்டநெரிசலை பயன்படுத்தி சிலர் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்றனர். தனியாக நடந்து செல்லும் பெண்களை சிலர் கேலி கிண்டல் செய்கின்றனர். இதனால் பெண்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் பெண்களின் நிலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதேபோல் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு போதிய பாதுகாப்பு இருப்பதில்லை. குறிப்பாக, நகை பணத்துக்காக வயதான பெண்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அவ்வப்பொழுது நடைபெற்று வருகிறது. இளம்பெண்கள் மட்டுமின்றி பள்ளி மாணவிகள், பெண் குழந்தைகளும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிரங்கள் கூறுகின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடக்கும் குற்றங்களை தடுக்க போலீசார் முனைப்புடன் செயல்பட வேண்டும். சமூகவிரோத செயல்கள் அதிகம் நடக்கும் இடங்களில் போலீசார் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டும். பெண்களை கேலி, கிண்டல் செய்வோர் மீதும், செயின் பறிப்பில் ஈடுபடும் ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.
ரயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்பு போலீசார் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டும். பறக்கும் ரயில் நிலையங்களில் பகலில் ஆண்கள் செல்லவே பயப்படும் நிலையுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . சென்னையின் பெரும்பாலான தெருக்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இது மர்ம ஆசாமிகளுக்கு சாதகமாக இருக்கிறது. இருட்டை பயன்படுத்தி பெண்களிடம் நகை, பணத்தை பறித்து செல்கின்றனர். எனவே, தெருவிளக்குகளை முறையாக பராமரிப்பதோடு, தேவையான இடங்களில் மின்விளக்குகள் அமைப்பது மாநகராட்சியின் கடமை.

தங்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து போராட பெண்கள் முன்வர வேண்டும். விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். தனியாக செல்லும்போது நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். நகைகள் அணிந்து செல்லும் நிலை ஏற்பட்டால், நகைகள் வெளியே தெரியும்படி அணிந்து செல்லக்கூடாது. வீட்டில் தனியாக இருக்கும்போது கதவுகளை மூடிவைத்திருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்கள் வந்தால், வீட்டுக்குள் அனுமதிக்காமல் பேசி அனுப்பி விடவேண்டும். நகை பாலீஷ் போட்டு தருவதாக கூறி நகைகளை திருடி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே உஷாராக இருப்பது முக்கியம். பஸ்களிலோ, தெருக்களில் செல்லும்போதோ யாராவது கேலி, கிண்டல் செய்தால் தைரியமாக போலீசில் புகார் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். இவர்கள் இரவு நேரத்திலும் வேலை செய்ய வேண்டியுள்ளது. பணிமுடித்து கால் டாக்சியில் வீடு திரும்பும்போது பயத்துடனே வரவேண்டியுள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால், செல்போனில் அவர்கள் போலீசாரை தொடர்பு கொள்ளும் வகையிலான அப்ளிகேஷனை கொண்டுவர வேண்டும்.

வயதான பெண்களை குறிவைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடிக்கின்றனர். எனவே, முதியோரை தனிமையில் விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை தடுக்கும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நல்ல தொடுதல், தவறான நோக்கத்துடன் தொடுதல் குறித்து பெண் குழந்தைகளுக்கு விளக்கி சொல்ல வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனைகள் வழங்குவது மட்டுமின்றி, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் பெண்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ளலாம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிவோர் மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் செய்தால் அலட்சியப்படுத்தாமல் கடமையை செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியும்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்