கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை இப்போது சாத்தியம்!
கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை இப்போது சாத்தியம்!
குழந்தைப்பேறுக்கு வேறு வாய்ப்பே இல்லாத பெண்கள் ‘வாடகைத்தாய்’ உதவியுடன்தான் தாய்மை அடைய முடியும் என இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். மருத்துவ உலகில் இன்றைய வளர்ச்சியோ மழலை பாக்கியத்துக்கு இனி ‘வாடகைத்தாய்’ தேவையில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளன. இதற்குக் காரணகர்த்தா ஸ்வீடன் நாட்டு மருத்துவர் மாட்ஸ் பிரான்ட்ஸ்ராம்!
புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பை அகற்றப்பட்ட ஒரு பெண், தாய்மை அடைய முடியாததை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறார். இதை அறிந்த மாட்ஸ் பிரான்ட்ஸ்ராம், மாற்று அறுவை சிகிச்சை மூலம் உடல் உறுப்புகளை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பொருத்தப்படுவதைப்போல, கர்ப்பப்பையையும் பொருத்த முடியுமா என ஆராய்ச்சி மேற்கொண்டார்.
இது தொடர்பாக, இவர் செய்த 22 அறுவை சிகிச்சைகளில் 9 பேருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்தது. அந்த 9 பேரில் 61 வயதான தாயின் கர்ப்பப்பை, 36 வயதான அவருடைய மகளுக்கு வெற்றி கரமாக பொருத்தப்பட்டது. இதன் காரணமாக அந்தப் பெண்மணி 2014 செப்டம்பரில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதன்மூலம் உலகத்திலேயே முதன்முறையாக, கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிறக்க வைத்த சாதனைக்கு மருத்துவர் மாட்ஸ் பிரான்ட்ஸ்ராம் சொந்தக்காரர் ஆகியுள்ளார்…’’ என்கிற மகப்பேறு மருத்துவர் ஜெயராணி, கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை குறித்த தகவல்களைத் தொடர்கிறார்.
‘‘4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 பெண்களில் ஒருவர் கர்ப்பப்பை இல்லாமலே பிறக்கிறார். சிலருக்கு விபத்து காரணமாகவும், புற்றுநோய் காரணமாகவும் கர்ப்பப்பை அகற்றப்படுகிறது. கர்ப்பப்பை இல்லாத அல்லது அகற்றப்பட்ட பெண்கள் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற முயற்சிக்கின்றனர். அதற்கு இனி அவசியம் இருக்காது. கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆய்வுகள் 1985ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டன. முதன்முதலில் இந்த ஆய்வு மூலம் ஒரு நாய் குட்டி ஈன்றது. அதன் பின், துருக்கியில் நடந்த அறுவைசிகிச்சை தோல்வியில் முடிந்தது.
2009ல் நடைபெற்ற கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையில் திருநங்கை ஒருவர் உயிரிழந்தார்.எங்களுடைய மருத்துவமனையில் ஓமன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை பொருத்தினோம். அவருக்கு மாதவிலக்கு வந்தது. ஆனால், கர்ப்பப்பை வளரவில்லை. இனி அந்தக் கவலைகள் இல்லை!கர்ப்பப்பையைத் தானம் செய்பவருக்கு 12 மணி முதல் 16 மணி நேரம் வரை ஆபரேஷன் நடைபெறும். அதை பொருத்த 6 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். கர்ப்பப்பை பொருத்தப்பட்ட பெண் ஒரு வருடம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்.
கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை எந்த வயதிலும் மேற்கொள்ளலாம். கர்ப்பப் பையைத் தானமாக பெறுவதற்கும் வயது தடையல்ல. தானமாக பெறுபவரின் ஆரோக்கியம்தான் மிகவும் முக்கியம். நமது நாட்டில் இந்த அறுவை சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும்…’’