ரேஷன் கடைக்கு கிராமமக்களே வீட்டுக்கு வீடு ரூ50ஐ வாடகையாகத் தரும் அவலம்

ரேஷன் கடைக்கு கிராமமக்களே வீட்டுக்கு வீடு ரூ50ஐ வாடகையாகத் தரும் அவலம்

ரேஷன் கடைக்கு கிராமமக்களே வீட்டுக்கு வீடு ரூ50ஐ வாடகையாகத் தரும் அவலம்

 

பெரம்பலூர் அருகே பகுதி நேர ரேஷன் கடைக்கு 5ஆண்டுகளாக கிராமமக்களே வீட்டுக்கு வீடு ரூ50ஐ வாடகையாகத் தரும் அவலம் தொடர்கிறது. பெரம்பலூர் அருகேயுள்ள வேலூர் ஊராட்சிக்கு உட்பட்டது கீழக்கணவாய் கிராமம். இங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரி விழாவிற்கு கலெக்டர் தரேஸ்அஹமது நேற்று சென்றிருந்தார். விழா முடிந்ததும் கிராம மக்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுகொடுத்தனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது : வேலூர் ஊராட்சிக்குட்பட்ட கீழக்கணவாய் கிராமத்தில் 4500 பேர் வசிக்கிறோம். எங்கள் ஊரில் 350 குடும்ப அட்டைகள் உள்ளன. எங்கள் ஊருக்குப் பகுதி நேர ரேஷன் கடை வந்து 5 வருடங்கள் ஆகிறது. இதுவரை அதற்கு சொந்தக்கட்டிடம் அரசால் கட்டித் தரப்படவில்லை. மக்களே கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, மாத வாடகையாக அட்டை ஒன்றுக்கு ரூ50 வீதம் செலுத்தி வருகிறோம். இதுவரை வாடகை கட்டிடமே 3 முறை மாற்றப்பட்டுள்ளது. வாடகை கொடுப்பது, வேறு கட்டிடம் மாற்றுவது எல்லாம் அரசின் கடமையாகும். எம்பி, எம்ல்ஏ, மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் என எல்லோரிடத்திலும் மனுகொடுத்தும் எந்தப் பயனுமில்லை.

அரசுக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகள் ஆகிறது. கட்டிடம் கட் டுவதற்கான எந்த அறிகுறியும்தென்படவில்லை. எனவே கலெக்டர் தமிழகஅரசுக்கு நேரடியாகப் பரிந்துரை செய்து, பகுதி நேர ரேஷன் கடைக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். மேலும், முழுநேர நியாயவிலைக் கடை, தகனமேடை, மயானத்திற்கான சுற்றுச் சுவர், மகளிருக்கான சுகாதார வளாகம், குடிநீர்வசதி, சிமெண்ட் சாலை வசதி, காவிரி நீருக்கான பொது பைப் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், எங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, தேசிய ஊரக வேலைவாய்ப்புப் பணிக்கான அடையாளஅட்டை அனைத்தையும் 21ம் தேதி கலெக்டரிடம் நேரில் ஒப்படைக்க இருக்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்