மெக்கா மசூதி விபத்துக்கு பேஸ்புக்கில் மகிழ்ச்சி வெளிப்படுத்திய தமிழக பாஜக நிர்வாகி கைது!
மெக்கா மசூதி விபத்துக்கு பேஸ்புக்கில் மகிழ்ச்சி வெளிப்படுத்திய தமிழக பாஜக நிர்வாகி கைது!
மெக்கா மசூதியில் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழந்த நிலையில், அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த தமிழக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது பேஸ்புக் பதிவில், மெக்கா மசூதியில் சமீபத்தில் நடந்த விபத்தில் முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை வரவேற்று மகிழ்ச்சியடைவதாக கருத்து பதிவு செய்திருந்தார். இதை ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சில முஸ்லிம் பேஸ்புக் பயனாளிகள் பார்த்து, அந்த தகவலை, திருமங்கலத்திலுள்ள முஸ்லிம்களுக்கு தெரிவித்துள்ளனர். திருமங்கலத்தை சேர்ந்த அஜ்மிர் அலி என்பவர், பேஸ்புக் பதிவு குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறை, வேல்முருகனை கைது செய்து, 153ஏ, 295ஏ, 505(1) (c) மற்றும் 505 (2) உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணையின்போது வேல்முருகன் தகவல் தொழில்நுட்ப பாடத்தில் இளநிலை பட்டம் பயின்றவர் என்பதும், திருமங்கலத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவருபவர் என்பதும் தெரியவந்துள்ளது. சர்ச்சைக்குறிய அந்த பேஸ்புக் கருத்து அவரது பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி, தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயற்குழு உறுப்பினர் பதவியை அக்கட்சி இவருக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.