பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கூற மறக்கும் விஷயங்கள்!
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கூற மறக்கும் விஷயங்கள்!
முன்பெல்லாம் திருமணம் ஆனவர்களுக்கு சமையலறை டிப்ஸ் தான் அதிகம் கொடுக்கப்படும். ஆனால் இந்நாட்களில் இல்லறம், தாம்பத்தியம் போன்றவற்றுக்கு கூட நிறைய டிப்ஸ் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதன் பின்னணி ஒன்றும் பெரியதல்ல, எந்த ஒரு செயல் சமூகத்தில் பற்றாக்குறையாக இருக்கிறதோ அதற்கு தீர்வுக் கூற வேண்டியது தான் முதல் வேலை.
திருமணத்திற்கு முன்பு பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார்கள். தாம்பத்தியம் என்றால் என்ன, இல்லறம் எவ்வாறு இருக்கும், புதிய இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அனுப்புவார்கள். தற்போதைய கூட்டுக் குடும்ப வாழ்வியல் மாறி, தனிக் குடித்தனம் என்றால் எந்த பிரச்சனையும் இருக்காது என்ற எண்ணத்தில் யாரும் எதுவும் இப்போது சொல்வதில்லை.
இதுவே, திருமணத்திற்கு பிறகு சின்ன, சின்ன காரணங்களினால் குடும்பத்தில் பெரும் பிரச்சனைகள் எழுவதற்கு கருவாய் இருக்கிறது….
முன்வந்து தொடங்க வேண்டும்
இல்லற வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதை ஆண் அல்லது பெண் தான் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு, இருவரில் யாராவது ஒருவர் மனதில் தோன்றிய மறுகணமே மற்றொருவரிடம் கலந்துரையாடிவிட்டு தொடங்க வேண்டும். இந்த பண்பு இல்லற வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது.
சிறந்த செயல்பாடு
உங்களால் முடிந்ததை செய்கிறீர்கள் என்று இல்லாமல், உங்களது சிறந்த முயற்சியை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் இது உங்களது வாழ்க்கை, பயன்பெற போவதும் நீங்கள் தான். உங்களது உறவினர்கள் அல்லது அக்கம்பக்கத்தினர் பற்றிய கவலையின்றி உங்களது சிறந்த முயற்சியை வெளிபடுத்துங்கள்.
உள்ளுணர்வை நம்புங்கள்
உங்கள் பெற்றோர் எப்படி உங்களுக்கு தீயதை நினைக்கமாட்டார்களோ, அப்படி தான் உங்களது உள்ளுணர்வும். எனவே, உங்களது உள்ளுணர்வை முழுமையாக நம்புங்கள். இது நீங்கள் சரியான முடிவை எடுக்க உதவும்.
தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம்
துணை, உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என யாருக்காகவும் உங்களது தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள், அதற்கென உங்களது சுயத்தை இழந்துவிட வேண்டாம்.
பிரிவுகள் நிரந்தரமல்ல
பிரிவுகளை தாங்கும் தைரியம் வேண்டும். பிரிவு உங்களை கடந்து செல்லும் மேகத்தை போல, அது நிரந்தரமற்றது. அதை எண்ணி உங்கள் நாளைய இணைப்பை இழந்துவிடாதீர்கள். தவறுகள் செய்யாத மக்களே இல்லை. தவறை திருத்திக் கொள்ளுங்கள் நீங்கள் இழந்தவை, தானாகவே உங்களை வந்தடையும்.
சமரசம் வேண்டும்
சமரசம், விட்டுக்கொடுத்து போவது போன்றவை இன்றி நீங்கள் உங்களது கடமைகளை முழுமையாக செய்ய முடியாது. சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்க்கையே இல்லை. கணவன், மனைவியை நம்பி ஓர் குடும்பம் இருக்கிறது. எனவே, இருவருக்குள் சமரசம் செய்துக் கொள்ளும் பண்பு, விட்டுக் கொடுத்து போவது போன்றவை இருக்க வேண்டும்.
ரெண்டுங்கெட்டானாக இருக்க வேண்டாம்
நீங்கள் எடுக்கும் முடிவு ஒன்று சரியாக இருக்க வேண்டும், அல்லது தவறாக இருக்க வேண்டும். ரெண்டுங்கெட்டானாக இருக்க கூடாது. தவறை கூட திருத்திக் கொள்ளலாம். ஆனால், சரி தவறு என்ற இரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொள்வது உங்களது வளர்ச்சிக்கு பெரும் தடையாய் இருக்கக் கூடியது. எனவே, நீங்கள் எடுக்கும் முடிவை தீர்க்கமாக எடுங்கள். தவறாக இருந்தால் கூட நாளை திருத்திக் கொள்ளலாம்.