காய்ச்சலை குணமாக்கும் காட்டு சீரகம்
காய்ச்சலை குணமாக்கும் காட்டு சீரகம்
காய்ச்சலை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், பேன் தொல்லையை போக்க கூடியதும், வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற கூடியதுமான காட்டு சீரகத்தை பற்றி நாம் இன்று பார்ப்போம்.
காட்டு சீரகத்துக்கு ‘வன சீரகா’ என்ற வடமொழி பெயர் உண்டு. சிற்றிலை என தமிழில் அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட காட்டு சீரகம் மருந்தாகிறது. அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், வயிற்று வலியை போக்கும். உடலுக்கு பலம் தரும் சத்துக்களை கொண்டது. வயிற்று பூச்சிகளை வெளியேற்றும். தோல் நோய்களுக்கு அற்புத மருந்து. காட்டு சீரகத்தை பயன்படுத்தி காய்ச்சலுக்கான தேனீர் தயாரிக்கலாம்.
அரை ஸ்பூன் காட்டு சீரகப் பொடி, ஒரு ஸ்பூன் சமையலுக்கு பயன்படும் சீரகம், சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்தால், வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும். அஜீரணத்துக்கு நல்லது. நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். விஷக் காய்ச்சல், மலேரியா காய்ச்சல், ஒவ்வாமையினால் ஏற்படும் காய்ச்சலை தணிக்க கூடியது. ஈரலை பலப்படுத்தும்.
சிரங்கு, பேன்களை போக்கும் மேல் பூச்சு மருந்தாகிறது காட்டு சீரகம். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு, சீரகப்பொடி சேர்த்து லேசாக சூடு செய்ய வேண்டும்.இதை தலைக்கு தடவிய பின், சிறிது நேரம் கழித்து குளித்தால் பேன்கள் கொல்லப்படும். முடி பாதுகாக்கப்படும்.எலுமிச்சையில் சாற்றை எடுத்தபின் தோலை தூக்கி வீசாமல், முகத்தில் தடவினால் கரும்புள்ளிகள், பருக்கள், மருக்கள் மறையும். பற்களில் வைத்து தேய்க்கும்போது மஞ்சள்தன்மை மறைந்து வெண்மையாகிறது.
காட்டு சீரகம் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. விஷ காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும்.
காட்டு சீரகத்தை பயன்படுத்தி வெண்புள்ளிக்கான உள் மருந்து தயாரிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எள்ளுப்பொடி, அரை ஸ்பூன் காட்டு சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி காலை, மாலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால், வெண்புள்ளி, உள்ளங்கையில் ஏற்படும் கரும்புள்ளியை போக்கும். அடம் பிடிக்கும் தன்மை மறையும். உடலுக்கு குளிர்ச்சி, பலத்தை கொடுக்கும்.
காட்டு சீரகத்தை கொண்டு வயிற்று பூச்சிகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நெய், சிறிதளவு காட்டு சீரகப்பொடி சேர்த்து சூடு செய்யவும். இதை காலை, மாலை எடுத்துக்கொள்ளலாம். இதை சாப்பிடும்போது வயிற்றுபோக்கு உண்டாகும். அப்போது பூச்சிகள் வெளியேறும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய இந்த காட்டு சீரகத்தை வயிற்று கோளாறுகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு வேளைக்கு 3 முதல் 5 கிராம் அளவுக்கு பயன்படுத்தலாம். தேனில் குழைத்து சாப்பிடும்போது வயிற்று புழுக்கள் வெளியேறும். நோயினால் பாதிக்கப்பட்டு பலவீனம் அடைந்தவர்கள், காட்டு சீரகத்துடன் தேன் சேர்த்து சாப்பிடும்போது உடல் தேறும். இதை 48 நாட்கள் சாப்பிடலாம்.