இன்று சர்வதேச அமைதி தினம்
உலக அளவில் ஒரு அமைதி தினம் கொண்டாடப்படுவதால், சர்வதேச சமூகத்தில் ஒரு நல்லிணக்கம் ஏற்படுவதற்கு ஒரு உந்துதலாக அமைகிறது.
சர்வதேச அமைதி தினம் செப்டம்பர் 21 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1982 ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்துக்கு ஒரு மரகதப்புறா 5 இலைகள் கொண்ட ஒரு காம்பை கவ்வியபடி உலக வரைபடத்திற்கு மேல் பறக்கும் அடையாள சின்னம்(Logo) உருவாக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தின் மணி, அமைதி தினத்தின் துவக்கமாக ஒலிக்கச் செய்யப்படுகிறது. பிறகு, எல்லா தேசம் மற்றும் கண்டங்களை (ஆப்பிரிக்காவை தவிர்த்து) சேர்ந்த குழந்தைகளுக்கும் நாணயங்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைவுகூரும் வகையில், ஜப்பான் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக ஒரு பரிசுப் பொருளும் வழங்கப்படுகிறது.
அதில் ’முழுமையான உலக சமாதானத்திற்காக வாழுங்கள்’ என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தினம் பல நல்ல காரணங்களுக்காக கடைபிடிக்கப்பட்டாலும், போர், மற்றும் வன்முறையை ஒழிக்கும் நோக்கத்தை முதன்மையாக கொண்டது.
இந்த நாளை முன்னிட்டு போர் நடந்து வந்தாலும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது. மனிதாபிமான அணுகுமுறைகள் கையாளப்படுகிறது.
பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களுடைய, கடமை, நோக்கம் சமாதானம், அமைதியை மக்களிடையே விதைப்பதாக சொல்லப்பட்டாலும், வன்முறை, தீவிரவாதம், கட்சிகளின் மோதல்கள், உள்நாட்டு இனகலவரம், அகதிகள் உருவாகும் அவலம், மத உரசல்கள், எல்லைப் பிரச்சனைகள், கொள்கைப் பிரச்சனைகள், வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் என அமைதியற்ற விபரீத நிலையில்தான் இந்த சர்வதேச சமுதாயம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில், அமைதி, நல்லிணக்கத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளும் சக்தி வாய்ந்ததாகவே களப்பணியில் இருக்கிறது. அதில் ஒரு முயற்சிதான் இந்த அமைதி தின அனுசரிப்பும்.
மனிதனுக்குள் இருக்கும் மனிதாபிமான, சமாதான எண்ணங்களை வெளிக்கொணருவதைவிட, ஏதாவது ஒரு உணர்வுப்பூர்வமான கொள்கைகளை பேசி தட்டி எழுப்புபவர்களிடம்தான் மக்கள் எளிதாக பற்றிக்கொள்கின்றனர்.
இங்கு உள்ள கொள்கைகள் எல்லாம் ஒரு எதிரணியை உருவாக்குவதில் முனைப்பு காட்டுகிறது. மோதல் நிலையில்தான் வளர்ச்சியே துவங்குவதாக கருதுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் உலக அமைதி என்பது எட்டா கனியா? அப்துல் கலாம் காணச்சொன்ன கனவா?
அடிமைகள் நாட்டில்தான் சுதந்திரம் அதிகமாக பேசப்படும். ஆரவாரமான உலகில்தான் அமைதியும் அதிகமாக வலியுறுத்தப்படும்.
அமைதி நிலவினால் யாருக்கு பெருமை? அவதியான உலகினால் யாருக்கு நன்மை?