பிறந்த குழந்தைகளின் மரபணுவை டெஸ்ட் பண்ணிக் கோரியவரின் ஆண்மையை பரிசோதிக்க ஆர்டர்!
பிறந்த குழந்தைகளின் மரபணுவை டெஸ்ட் பண்ணிக் கோரியவரின் ஆண்மையை பரிசோதிக்க ஆர்டர்!
சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த கணவன்–மனைவி இருவருக்கு இடையில் நிகழ்ந்த வழக்கு ஒன்றில், கணவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் உறவு இருந்ததை மனைவியே ஒப்புக்கொண்டதாகவும், தன் மனைவிக்கு பிறந்த இரு பிள்ளைகளும் தனக்கு பிறந்தவை அல்ல என்றும், அதனால் 17 வயது மற்றும் 16 வயதான தன் மகன்களுக்கு மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். அவரது மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தன் மனைவிக்கு பிறந்த இரு பிள்ளைகளுக்கும் மரபணு பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கணவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “இந்த மனுவை மேலும் விசாரிப்பதற்கு முன்பு மனுதாரர் (கணவர்) பிள்ளை பெறுவதற்கான ஆண்மைத் தன்மை கொண்டவரா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். எனவே அவர் உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரு வாரத்துக்குள் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ராஜாஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தக்க பரிசோதனைகள் மேற்கொண்டு அந்த பரிசோதனை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்ப வேண்டும்”என்று நீதிபதிகள் கூறினர்.