அனைத்து நகரங்களிலும் குடிநீர் வினியோகம் தனியார் வசம்..!
அனைத்து நகரங்களிலும் குடிநீர் வினியோகம் தனியார் வசம்..!
நாடு முழுவதும் உள்ள நகரங்களில், குடிநீர் வினியோகிக்கும் பொறுப்பை தனியார் மயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பணவீக்கத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, நாடு முழுவதும் உள்ள நகரங்களில் குடிநீர் வினியோகம் செய்யும் பணி, அந்தந்த நகராட்சி, மாநகராட்சிகள் வசம் உள்ளது. இதில், அதிரடியாக சில மாற்றங்களை மேற்கொள்ள, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துஉள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:குடிநீர் வினியோகம் செய்யும் பணியை, அரசு – தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் பதித்தல்; குடிநீருக்கான கட்டணம் நிர்ணயித்தல்; கட்டணத்தை கணக்கிடுவதற்கான மீட்டர் பொருத்துதல் போன்ற பணிகள் தனியார் வசம் விடப்படும்.மேலும், பணவீக்கத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யும் திட்டமும் உள்ளது. இதன்படி, பணவீக்கம் அதிகரித்து, பொருட்களின் விலை அதிகரித்தால், குடிநீருக்கான கட்டணமும், அதற்கேற்ப அதிகரிக்கும். பணவீக்கம் குறைந்தால், கட்டணமும் குறையும். ஆனாலும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரைமுறைகள், துவக்க நிலையிலேயே உள்ளன. முதல் கட்டமாக, மத்திய அரசின், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வரும் நகரங்கள் மற்றும், ‘அம்ருத்’ திட்டத்தில் வரும் நகரங்களில், இந்த திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களின் பிரதிநிதிகளுடனும், மாநில அரசு பிரதிநிதிகளுடனும், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள், சமீப காலமாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதில், சுமுகமான முடிவு எட்டப்பட்டதை அடுத்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை, அரசு துவக்கிஉள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில், இந்த அறிக்கை தயாராகி விடும் என தெரிகிறது. பிலிப்பைன்சின் மணிலா நகரில், இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள், அங்கு சென்று ஆய்வு நடத்தி வந்துள்ளனர். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
காரணம் என்ன?
குடிநீர் வழங்கும் பொறுப்பை, தற்போது அரசுத் துறைகளே மேற்கொள்கின்றன. பல இடங்களில் குழாய் உடைப்பு, திருட்டுத் தனமாக நீர் எடுக்கப்படுவது போன்ற குளறுபடிகள் உள்ளன. இதனால், ஏராளமான நீர் வீணாகிறது. நம் நாட்டில் தற்போது, 20 சதவீத குடிநீர் இணைப்புகளுக்கு மட்டுமே, சில நகரங்களில் மீட்டர் பொருத்தப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 40 சதவீத இணைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால், இந்த தண்ணீருக்கு வருமானம் கிடைப்பது இல்லை. அரசு – தனியார் பங்களிப்பின் கீழ், இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், குடிநீர் வினியோகத்தின் மூலம், வருவாய் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். குடிநீர் வினியோகிக்கும் சேவையின் தரமும் உயரும்.
எச்சரிக்கை:
கடந்த, 2000ம் ஆண்டில், உலக வங்கி உதவியுடன், டில்லி, மும்பை போன்ற நகரங்களில், அரசு – தனியார் பங்களிப்புடன் குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் போராட்டங்களால், இந்த திட்டம் தோல்வி அடைந்தது. இதனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில், அரசு மிகவும் எச்சரிக்கையாக செயல்பட முடிவு செய்துள்ளது. தற்போது, டில்லியில், மூன்று பகுதிகளில் மட்டும், அரசு – தனியார் பங்களிப்புடன், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கைவிடப்பட்ட திட்டம்:
*உலக வங்கி, கடந்தாண்டு வெளியிட்ட அறிக்கையில், ‘வளரும் நாடுகளில், 65 நாடுகளில், அரசு – தனியார் பங்களிப்புடன் குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2007ல்,
இவற்றில், 24 நாடுகள், இந்த திட்டத்தை கைவிட்டு விட்டன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது
*சர்வதேச அளவில், 35க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சில நகரங்களில், பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் வசம், குடிநீர் வினியோகம் செய்யும் பணி வழங்கப்பட்டிருந்தது. இவற்றில், 180 நகரங்களில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க, பெரும்பாலான நகரங்கள் முன்வரவில்லை
*மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், குடிநீர் வினியோகம், பிரான்சை சேர்ந்த, ‘வியொலியோ’ என்ற, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.