பத்து நிமிட பதற்றம்!

பத்து நிமிட பதற்றம்!

பத்து நிமிட பதற்றம்!

 

தமிழகத்தின் முன்னோடி. இரைப்பை மற்றும் குடலியல்அறுவை சிகிச்சை மருத்துவர்களில் குறிப்பிடத்தக்கவர். அரசு மருத்துவமனையில் இந்தியாவின் முதல் வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்த பெருமைக்கு உரியவர். ‘கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை குறைந்த செலவில் செய்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதுதான் எனக்கு இதைவிடப் பெருமை’ என்று அதற்கான ஆய்வுகளை செய்து வருகிற டாக்டர் சண்முகம் நம்மிடம் பேசியதிலிருந்து…

‘‘உடலுக்குள் இருக்கும் உறுப்புகளிலேயே மிகப்பெரியது கல்லீரல். சுமார் இரண்டரை கிலோ வரை இருக்கும். வயிற்றின் வலது பாகத்தில் விலா எலும்புக் கூட்டுக்குள் இருக்கும் இந்த கல்லீரல், பெரிய உறுப்பு மட்டுமல்ல… நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பும்கூட. மருத்துவர்களுக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 500க்கும் அதிக வேலைகளைக் கல்லீரல் செய்கிறது. நாம் உண்ணும் உணவு நல்லதாகவோ, நச்சுத்தன்மை கொண்டதாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் இவற்றைத் தனித்தனியாகப் பிரித்து, உடலுக்குத் தேவையான சத்துகளை தேவையான உறுப்புகளுக்கு அனுப்பிவிட்டு கழிவுகளை வெளியேற்றுகிறது.

இதுபோல கண்ணுக்குத் தெரியாத நுட்பமான வேலைகளைச் செய்வதால் கல்லீரலை Nano factory என்கிறோம்.கல்லீரல் நோய்களில் இந்தியாவைப் பொறுத்தவரை மதுப்பழக்கம்தான் முதன்மையான நோயாக இருக்கிறது. சராசரியாக, 30 சதவிகிதம் இந்தியர்கள் அளவுகடந்து குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மது அருந்திய பிறகு சரிவிகிதமான, சுகாதாரமான உணவும் உண்பது கிடையாது. ஏற்கனவே அளவு கடந்த மது, உணவின் மூலம் சுகாதாரமற்ற கிருமிகளின் தாக்கம், சத்துள்ள உணவு இல்லாதது என எல்லாம் ஒன்றுசேர்ந்து கல்லீரலைக் கெடுத்துவிடுகிறது.

மது அருந்துவதால் கல்லீரலில் என்ன கெடுதல் நேர்கிறதோ, அதற்கு இணையாக கொழுப்புச் சத்து உணவுகளை உண்பதாலும் ஏற்படுகிறது. மது, கொழுப்பு உணவுகளுக்கு அடுத்துபாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் என்று பலவித கிருமிகளாலும் கல்லீரல்
நோய்கள் வருகின்றன. இவற்றில் பாக்டீரியா மற்றும் அமீபா கிருமிகளால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த நிறைய மருந்துகள் வந்துவிட்டன.

கல்லீரலை மட்டுமே தாக்கும்

ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி. டி, ஈ, எஃப் என 6 வகை வைரஸ்களை கண்டுபிடித்திருக்கிறோம். ஏ வகை ஹெபடைட்டிஸை எளிதில் குணப்படுத்திவிடலாம். பி மற்றும் சி வைரஸ்கள் கல்லீரலைத் தாக்கினால்குணப்படுத்துவது சிரமம். இந்த பி, சி வைரஸ்களின் தாக்கம் உடனடியாகத் தெரியாது. உள்ளே சென்றிருக்கும் கிருமி பெருகி பாதிப்பை உண்டாக்க 15-20 வருடங்களுக்கு மேலும் ஆகலாம். அதன்பிறகு கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக நச்சுத்தன்மையை அடைந்து Hepatitis inflammation என்ற அழற்சி உண்டாகும்.

இதன் அடுத்தநிலையாக கல்லீரல் கடினத்தன்மை கொண்டதாகிவிடும். இதை Fibrosis நிலை என்கிறோம். இதைக் கண்டுபிடிக்க Fibro scan முறை இப்போது வந்திருக்கிறது. ஃபைப்ரோசிஸின் நான்காவது நிலைக்குள் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது எளிது. ஃபைப்ரோசிஸின் அடுத்தகட்டமாக கல்லீரல் சுருங்கி Cirrhosis என்ற நிலையை அடைந்துவிட்டால் குணப்படுத்துவது சிரமம். துரதிர்ஷ்டவசமாக சிரோசிஸ் நிலையை அடைந்தபிறகே அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியும்.

கை, கால் வீக்கம், பலவீனம், பசியின்மை, வழக்கமான வேலைகளை செய்ய முடியாத அளவு சோர்வு, எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். இன்று சிரோசிஸ் நிலை வந்தாலும் நோயாளியைக் காப்பாற்ற சிகிச்சைகள் வந்துவிட்டன. அதனால், இந்த அறிகுறிகள் தெரிந்தவுடன் சாதாரண ரத்தப்பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்தாலே கல்லீரல் வீக்கம், கல்லீரலில் கொழுப்பு சேர்ந்திருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலாம்.

வைரஸ் பாதிப்பு கொண்ட ஒருவர் ரத்த தானம் செய்யக் கூடாது. ஆனால், பி மற்றும் சி வைரஸின் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டால், அதை 3 மாதங்களுக்குப் பிறகே கண்டுபிடிக்க முடியும். இந்த சிக்கலால் ஹெபடைட்டிஸ் பாதிக்கப்பட்ட ஒருவரது ரத்தம் இன்னொருவருக்கு தானமாக வழங்குகிற தவறு நடக்க வாய்ப்பு உண்டு. இந்த சிக்கலை சமாளிக்க ELISA test முறையில் நான்காவது தலைமுறை பரிசோதனை இப்போது இருக்கிறது.

இந்தப் பரிசோதனையில் 3 வாரத்துக்குள் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் கண்டுபிடித்துவிடலாம். இதற்கும் மேலாக, Nucleic acid test என்று நவீன கண்டுபிடிப்பு முறை மூலம் 2 நாட்களுக்குள் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் வைரஸ் தொற்றைக் கண்டுபிடித்துவிட முடியும். கல்லீரல் சிரோசிஸ் நிலை அடைந்துவிட்டால் கல்லீரல் மாற்று சிகிச்சைதான் ஒரே தீர்வு. அதற்கு 25 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும். குறைந்த செலவில் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்வதற்கான கண்டுபிடிப்புகள் இன்னும் 5 வருடங்களில் சாத்தியமாகும்.

ஹெபடைட்டிஸ் சி வைரஸுக்கு Interferon என்ற ஊசியை இதற்கு முன் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இதைவிட இன்னும் சக்தி மிக்கதாக, பக்க விளைவுகள் இல்லாத, சமீபத்தில் Sofosbuvir என்ற மாத்திரை அறிமுகமாகியிருக்கிறது. ஒருவரிடமிருந்து கல்லீரலை எடுத்த 10 நிமிடத்துக்குள் மற்றவருக்குப் பொருத்தியாக வேண்டும். இல்லாவிட்டால், மாற்று சிகிச்சைக்கு உதவாமல் அந்த கல்லீரல் கெட்டுப் போய்விடும். இந்த நேரத்தை நீட்டித்து, கல்லீரலைப் பாதுகாக்க முடியுமா என்றும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திருக்கோவிலூர்தான் எனக்கு சொந்த ஊர். அந்த ஊரில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர், வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு கல்லீரலில் ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்பட்டிருந்தது தெரிந்தது. ‘நம்ம ஊர் டாக்டர் மெட்ராஸ்ல இருக்காரு. அவரைப் போய் பார்’ என்று யாரோ சொல்லி, என்னைத் தேடி வந்திருந்தார்.

Entecavir என்ற மருந்து அப்போதுதான் வந்திருந்தது. Entecavir பயன்படுத்தி ஹெபடைட்டிஸ் பியை அவருக்கு முழுமையாக குணப்படுத்தினேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்ததும் மறுபடியும் ஆலோசனைக்காக வந்தார். ‘திருமண வாழ்க்கை இதனால் பாதிக்கப் போவதில்லை. மணப்பெண்ணுக்கு தடுப்பூசி போட்டால் மட்டும் போதும்’ என்று அந்த மணப்பெண்ணையும் வரவழைத்து ஹெபடைட்டிஸ் பி என்பது பற்றி விளக்கம் சொன்னோம். இதனால், தடுப்பூசி போட்டுக் கொண்டார் அந்த பெண். திருமணமும் செய்து கொண்டார்.

சமீபத்தில் திருக்கோவிலூரில் மருத்துவ முகாம் ஒன்றை நடத்து வதற்காகச் சென்றிருந்தபோது, மனைவி, கைக்குழந்தையுடன் அந்த இளைஞர் வந்திருந்தார். கையில் வைத்திருந்த ஒன்றரை வயதுக் குழந்தையைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினார். மருத்துவரைக் கடவுளாக நினைக்கும் மக்களுக்கு, ஒரு மருத்துவர் உண்மையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் அதில் புரிந்துகொண்டேன். பணம், புகழ், விருதுகள் எல்லாமே மக்களின் அன்புக்கு முன்னால் இரண்டாம்பட்சம்தான்!’’

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்