பருப்பு பதுக்கல் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு
பருப்பு பதுக்கல் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் அகிலா கோசல்ராம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
உலக வங்கி அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்படி, உலக அளவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நாடுகளில் இந்தியா ஒரு நாடாக உள்ளது. உலக முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர். உணவு தட்டுப்பாடு உள்ள நாடுகளில், உலக அளவில் இந்தியா 15–வது இடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை சரி செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கவில்லை. தற்போதுதான் பிற நாடுகளில் இருந்து 5 ஆயிரம் டன் பருப்பை இறக்குமதி செய்ய உலக அளவிலான டெண்டர் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டாமல் உள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் சிலர் பருப்பு வகைகளை பதுக்கி வைத்துக் கொண்டு, விலையை அதிகரித்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகளை தடுக்கவேண்டிய அதிகாரிகள், மவுனமாக இருந்து வருகின்றனர். எனவே, கடந்த 15–ந்தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினேன்.
அதில் பருப்பு வகைகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பருப்பு வகைகள் மீதான விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கை தொடர்கிறேன். இந்த ஐகோர்ட்டு, என்னு டைய கோரிக்கை மனுவை பரிசீலிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி டி.மதிவாணன், எஸ்.வைத்திய நாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சூரியபிரகாசம் ஆஜராகி வாதிட்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்கள்.