சூரியனில் மிகப் பெரிய துளை! நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
சூரியனில் மிகப் பெரிய துளை! நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பூமியின் அளவைப் போல 50 மடங்கு பெரிதான துளை, சூரியனில் உருவாகியுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது.
இந்தத் துளையிலிருந்து புவியை நோக்கி அதிவேகமாக வெப்பக் காற்று வெளியேறி வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
சூரியனின் வெளி அடுக்கிலும், காந்தப் புலத்திலும் இந்தத் துளை காணப்படுவதாகவும், கடந்த 10-ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தின் வாயிலாக அதைக் கண்டறிந்துள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமியைப் போல அல்லாமல் வாயு மற்றும் பிளாஸ்மா எனப்படும் அயனிமப் பொருளால் சூழப்பட்டது சூரியன். அவற்றுக்கு நிரந்தர உருவம் கிடையாது. எனவே வாயுவும், பிளாஸ்மாவும் உருமாறும்போது இத்தகைய துளைகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சூரியனில் உருவாகியுள்ள துளையின் காரணமாக பூமியில் காந்தப் புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காந்தப் புயலால் விண்வெளி ஆராய்ச்சிக்காக பூமியில் இருந்து அனுப்பப்படும் செயற்கைக்கோள்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும். அதேபோல் பூமியின் ரேடியோ அலைகளை காந்தப் புயல் பாதிக்கும். இதனால் ரேடியோ அலைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் தொலைத் தொடர்புகள் தடைபட வாய்ப்புள்ளது.
சூரியனில் ஏற்பட்டுள்ள துளையானது வேறு திசைக்கு நகருவது தாமதமாகுமானால், புவியில் வெப்ப நிலை அதிகரிக்கும்.