அரசு பஸ்சில் மழை டிரைவருக்கு குடை பிடித்த கண்டக்டர்
விருதுநகரில் மழைக்கு அரசு பஸ் ஒழுகியதால் டிரைவருக்கு, கண்டக்டர் மற்றும் பயணிகள் மாறி மாறி குடை பிடித்துச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. நனைந்தபடியே பயணிகளும் பஸ்சில் பயணம் செய்தனர்.
தனியார் பஸ்கள் அனைத்தும் நவீனமாக ஓடும் நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 70 சதவீத பஸ்கள் ஓட்டை, உடைசலாக உள்ளன. திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ் கேரளா மாநிலம் சென்றபோது பெண் பயணி பஸ்சில் இருந்த ஓட்டையில் இருந்து கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு இயக்கப்படும் டவுன் பஸ்சில் (டி.என்.67 என் 400) டிரைவரின் இருக்கைக்கு மேல் பெரிய அளவில் ஓட்டைகள் உள்ளன. நேற்று மதியம் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகருக்கு இந்த பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது மழை பெய்தததால், டிரைவரின் இருக்கைக்கு மேல் பகுதியிலிருந்து தண்ணீர் கொட்டியது. இதனால், டிரைவர் சரவணனால் பஸ்சை ஓட்ட முடியவில்லை. இதையடுத்து பயணிகள் மற்றும் கண்டக்டர் முத்துராஜ் மாறி, மாறி டிரைவருக்கு குடை பிடித்தவாறு வந்தனர். பயணிகளும் நனைந்த நிலையில் கடும் அவஸ்தையுடன் பயணம் செய்தனர்.
போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், “அரசு பஸ்களில் தரமற்ற உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் 3 ஆண்டுகளிலேயே ஓட்டை பஸ்களாக மாறுகின்றன. பாடி கட்டும் போது மேற்கூரையில் தார் சீட் ஒட்டி தகரம் அடிக்க வேண்டும். ஆனால், தார் சீட் ஒட்டாமல் தகரம் அடிக்கப்படுகிறது. முறையாக பணி செய்யாததே இதற்குக் காரணம்” என்றனர்.