வேண்டாம் வெளிநாட்டு மோகம்: ஏமாற்றும் ஏஜென்ட்கள்
வெளிநாட்டு வேலை எத்தனை வலிகளைத் தந்தாலும், அதன் மீதான மோகம் இன்னும் குறையவில்லை. அந்த வலிகளுக்கு இதோ இன்னொரு சாட்சிதான் கஸ்தூரி.
வேலூர் மாவட்டம் மூங்கிலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவருடைய கணவர் முனிரத்தினம். 50 வயதைக் கடந்த கஸ்தூரிக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக, வெளிநாடு சென்று வேலை பார்த்து சம்பாதிக்க முடிவு செய்தார். திருவண்ணாமலையில் இருந்த ஏஜென்ட் ஒருவருடைய அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக, சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காகக் கடந்த ஜூலை மாதம் சென்றார் கஸ்தூரி. ரியாத்தில் அரபி ஒருவரது வீட்டில், வயதான மூதாட்டி ஒருவரை பராமரிக்கும் பணி இவருக்குத் தரப்பட்டது. அங்கு இருந்து தன் குடும்பத்தினரிடம் போனில் அவ்வப்போது பேசிவந்தார்.
கடைசியாக, கடந்த மாதம் பக்ரீத் பண்டிகை அன்று தன் குடும்பத்தினருடன் பேசியிருக்கிறார். அதன்பிறகு ஒருநாள் சவுதியில் இருந்து ஓர் அதிர்ச்சித் தகவல். “உங்கள் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருடைய வலது கை எடுக்கப்பட்டு விட்டது” என்று சொல்லியிருக்கிறார்கள்.
எந்த வீட்டுக்கு வேலைக்குப் போனாரோ, அந்த வீட்டின் முதலாளியால் கஸ்தூரியின் கை வெட்டப்பட்டதாகச் செய்தி பரவியது. அதைத் தொடர்ந்து தமிழக அரசும், வெளியுறவுத் துறையும், சவுதி அரசுக்கு அழுத்தம் கொடுக்க, “வீட்டில் இருந்து தப்பிச் செல்லும்போது அவரது கை அடிபட்டுவிட்டது. கையை யாரும் வெட்டவில்லை” என்று சவுதி அரேபியா அரசு மறுப்பு தெரிவித்தது. சவுதியில் உள்ள புகழ்பெற்ற ‘கிங்டம்’ மருத்துவமனையில் இவருக்கு அரசு சார்பில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளியுறவுத் துறை அதிகாரிகளின் தீவிர நடவடிக்கைக்குப்பின் கடந்த வாரம் சென்னை வந்து சேர்ந்த கஸ்தூரிக்கு தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வைப்பு நிதியாக அளிக்கப்பட்டு, அதில் மாதந்தோறும் கிடைக்கும் வட்டித் தொகையை கஸ்தூரிக்கு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கஸ்தூரிக்கு, சவுதியில் சட்டம் மற்றும் மருத்துவ உதவிகளை இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டது தமிழ் சமூக நல அமைப்பு. இது ஒரே ஒரு கஸ்தூரிக்கு மட்டும் ஏற்பட்ட நிலை அல்ல. கஸ்தூரியைப்போல எத்தனையோ பேர் அங்கு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஆனாலும், இன்னும் பலபேர் இங்கிருந்து வெளிநாட்டுக்குப் போகத் தயார் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள்.
அங்குள்ள யதார்த்த நிலைமைகள் பற்றி சவுதி தமிழ் சமூக நல அமைப்பின் செயலாளர் சுரேஷ்பாரதியிடம் கேட்டோம்.
“வெளிநாட்டு வேலைக்கு வருபவர்கள் தூதரக ஒப்புதலோடு வருவதுதான் சரியான முறை. ஆனால், அடிமட்ட வேலைக்கு குறிப்பாக, வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு வரும் பலர், இப்படி வருவது இல்லை. அதுதான் பிரச்னை. வீட்டுப் பணியாள் வேலைக்குத்தான் கஸ்தூரி விசா எடுத்துள்ளார். ஆனால் அவர், இந்திய தூதரகத்துடனும், சவுதி அரசுடனும் எந்த ஒப்பந்தமும் செய்யாத போலி ஏஜென்ட்கள் மூலம் வந்துள்ளார்.
சவுதியில் இருக்கும் முதலாளி ஒருவர் தனக்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்றால், அவர் இங்கிருக்கும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மூலம் ஆட்களைத் தேர்வு செய்வார்கள். அவர்களிடம் சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், ‘நீங்கள் இந்த வேலைக்கு, இந்த இடத்தில், இவ்வளவு சம்பளத்துக்குச் செல்ல சம்மதமா? வேலை நேரம், போன் செய்ய தொகை எல்லாம் உங்களுக்குச் சரியாக வருமா?’ என்று கேட்டு அவர்கள் முன்னிலையில்தான் விசா ஒப்பந்தம் செய்யப்படும். நம்மை வேலைக்கு எடுப்பவர் அந்த விசா தொகையைச் செலுத்திவிடுவார். இந்திய தூதரகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை விசாவுக்கு அனுமதி வழங்கும். விசாவுக்கு என்று எந்த பணமும் நாம் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால், ஒரு நாட்டுக்கு நாம் வேலைக்குச் செல்லும் முன், நம் உடல் நிலை, வயது, உணவுப் பழக்கவழக்கம், அந்த நாட்டின் தட்பவெப்ப நிலை நமக்கு ஒத்துவருமா என்பது போன்ற பல விஷயங்களையும் பார்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள அங்கீகாரம் பெற்ற ஏஜென்ட்கள் தகுதி உள்ள நபர்களை மட்டும்தான் எடுப்பார்கள். ஆனால், முறையற்ற ஏஜென்ட்கள் காசை வாங்கிக்கொண்டு முறைகேடாக அங்கு அனுப்பிவிடுவதால்தான் இப்படிப் பிரச்னை எழுகிறது. இப்படி வந்தவர்தான் இந்த கஸ்தூரி. சவுதிக்கு வீட்டுப் பணியாளாக வரும் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வீட்டுப் பணியாள் வேலை நேரம் பதினாறு மணிநேரம். அதோடு உணவு பழக்கமும் மாறுபடும். கஸ்தூரி அம்மாள் 55 வயதைக் கடந்தவர். பணியாற்ற முடியாமல் திணறி உள்ளார். மொழிப் பிரச்னையும் இருந்துள்ளது. இந்த விஷயங்கள் எதுவுமே தெரியாமல் இங்கு அவர் வந்துவிட்டார். வேலைப் பளுவை ஏற்றுகொள்ளும் நிலையில் அவர் இல்லை.
இந்த நிலையில், சவுதி தொழிலாளர் அதிகாரிகள் வழக்கமான ஆய்வுக்கு வந்தபோதுஅவர்களிடம் தனக்கு, ‘இங்கு இருக்கப் பிடிக்கவில்லை’ என்பதைச் சொல்லியுள்ளார். அதற்கு அந்த முதலாளி கஸ்தூரியை மிரட்டி உள்ளார். அதனால் பயத்தில் வீட்டில் இருந்து தப்பிக்க முதல் மாடி ஜன்னலில் சேலையைக் கட்டி இறங்கும்போது தவறி விழுந்து கையில் அடிபட்டுள்ளது. சவுதியில் சட்டப்படி வருபவர்களுக்கு அந்த அரசு முழுப் பாதுகாப்பையும் வழங்குகிறது. ஆனால், இப்படி முறைதவறி வந்தால் நமக்குச் சிக்கல்தான். பல இடங்களில் நம்முடைய பாஸ்போர்ட் நாம் வேலை செய்யும் முதலாளியிடம் இருக்கும். எனவே, அவரிடம் அடிமை வாழ்க்கை வாழும் நிலைகூட ஏற்படும். தொழிலாளர்கள் விஷயத்தில் சவுதி அரசு மிகக் கவனமாக இருக்கும். எங்கள் அமைப்பு சார்பில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட விசா பிரச்னைகளில் சிக்கிய தமிழர்களை தூதரக அனுமதியோடு நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளோம். கஸ்தூரி வேலை பார்த்த முதலாளி தூதரக அதிகாரியிடம் அனைத்தையும் விளக்கியுள்ளார். அவர் கை வெட்டப்பட்டது என்ற தவறான தகவல்கள் தமிழகத்தில் பரப்பப்பட்டு உள்ளது. சவுதி அரசு அவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க முடிவு செய்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
சரியான ஏஜென்ட்டுகளை அணுகாமல் வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்பவர்களுக்கு கஸ்தூரிக்கு நேர்ந்த சம்பவம் சரியான பாடம்.